நெற்றிப்பொட்டில் அடிக்கும் படம்… கர்ணன் குறித்து பெண் எம்.பி தெரிவித்த அதிரடி கருத்து!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான திரைப்படம் “கர்ணன்”. ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் நோக்கில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தாணு தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் குறியீடாக இடம்பெற்று இருக்கும் கொடியன்குளம் வன்முறைச் சம்பவம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாக இத்திரைப்படத்தில் காட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அரசியல் ரீதியாகத் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை எதிர்க்கொண்டு வரும் இத்திரைப்படம் குறித்து கரூர் எம்.பி.ஜோதிமணி அவர்கள் டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

அதில் “கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை வலியை எதிர்வினையாகப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும், குறியீடுகளும் நிறைய. அந்த உச்சந்தலை முத்தம்… சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்“ என்று பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு தற்போது ஊடகங்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறது.

கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இவரைத் தவிர நடிகர் நட்ராஜ், லால், லட்சுமி பிரியா, கௌரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் இடம்பெற்று உள்ளனர். திரைப்படம் வெளியாகி ஒருசில தினங்களில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் பெரும் அடையாளத்தைப் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.