close
Choose your channels

K-13 Review

Review by IndiaGlitz [ Friday, May 3, 2019 • മലയാളം ]
K-13 Review
Banner:
SP Cinemas
Cast:
Arulnithi, Shraddha Srinath, Yogi Babu, Vijay, Gayathri
Direction:
Barath Neelakantan
Production:
ST Shankar, Santha Priya
Music:
Sam C. S.
Movie:
K13

சென்ற ஆண்டு வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு பிறகு அருள்நிதியும், விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் இணைந்திருக்கும் படம் தான் கே-13 . அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ட்ரைலரிலேயே ஈர்த்தது. படத்தில் என்ன சுவாரசியமான விஷயங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞன் மதியழகன் (அருள்நிதி) ஒரு பப்பில் எழுத்தாளர் மலர்விழியை (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) சந்திக்கிறார். இதன் பின்னர் இவர்கள் கண் விழித்து பார்க்கையில்  இருவரும் கே-13 என்ற அபார்ட்மெண்டில் இருக்கிறார்கள். ஒரு இக்கட்டான சூழலில் அபார்ட்மெண்டில் சிக்கிக்கொள்ளும் அருள்நிதி, அங்கிருந்து தப்பித்தாரா, ஷ்ரத்தா யார், எதற்காக அருள்நிதியை தேடி வந்து இப்படி சிக்க வைக்கிறார்? இறுதியில் இவர்களது கனவுகளும் திட்டங்களும் நிறைவேறியதா என்பதே கே-13  படத்தின் கதை.

பல ரகசியங்களை மறைத்து வைத்தபடியே இருக்கும் மலர்விழி கதாபாத்திரத்தில் ஈர்க்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தனிமையில் சிக்கிய நிலையில், செய்த காரியம் ஒன்றே அதன் காரணியாக இருக்க, மன அழுத்தத்தாலும், குற்ற உணர்விலும் பாதிக்கப்பட்டு நிற்கும் ஒரு பெண்ணாக  ஷ்ரத்தா சிறப்பாக நடித்துள்ளார். வாய்ப்புகள் சரியாக அமையாத  நிலையில் கிடைத்த வாய்ப்பில் என்ன செய்வதென்று தவிக்கும் உணர்வையும், தானே வலிய வந்து ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்ள, அதனின்று வெளிவர முடியாமல் தவிக்கையில் பயத்தையும் பதற்றத்தையும் அருள்நிதி இயல்பாக வெளிக்கொண்டு வருகிறார். இவர்கள் இருவர் தவிர பிறருக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை, காயத்ரி மற்றும் ஆதிக் ஆகிய இருவருக்கும் மேலும் சில காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

முதல் பாதியின் முதல் இருபது நிமிடங்கள் பெரிதாக எதுவும் நடக்காத நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களின் பிரச்சனைகள் என இயக்குனர் அறிமுகம் செய்ய தொடங்குகிறார். அந்த பப் பாடல் படத்தின் ஓட்டத்துக்கு உதவவில்லை. அருள்நிதி தான் சிக்கி கொண்டுள்ளதை உணர்ந்து அபார்ட்மென்டிலிருந்து வெளியேற முயற்சிகளை தொடங்க, மலரின் முற்கதையில் எதோ சம்பவங்கள் இருக்கிறது என்ற ஆர்வத்தை தூண்டும் விதத்தில் முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பகுதியில் மலர்விழியின் கதை விரிகிறது. மலருக்கும் மதிக்கும் என்ன சம்பந்தம், எதனால் மதி இந்த சூழ்நிலையில் தள்ளப்பட்டான் என்பவை அடுத்தடுத்த காட்சிகளில் பரபர திரைக்கதையில் காட்டப்பட்டாலும், அந்த முற்கதை அவ்வளவு மனதை பாதிக்கும் விதமாக இல்லாதது ஒரு குறை தான். இத்தனையும் மீறி படம் முடிவை நெருங்கும் நிலையில் வரும் அந்த திருப்புமுனை யாரும் எதிர்பாராதது.

சாம்.சி.எஸ்  பின்னணி இசை பல இடங்களில் பரபரப்பை கிளப்புகிறது, பிக்கி லிக்கி பாடல் கதைக்கு பெரிதாக உதவவில்லை. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு அந்த அபார்ட்மெண்டில் உள்ளே நடக்கும் திகில் சம்பவங்களையும் அருள்நிதியின் பரபரப்பையும் நமக்கு தொற்றிக்கொள்ளும் வண்ணம் படம் பிடித்துள்ளது. ரூபனின் படத்தொகுப்பு ஆரம்பத்தில் சில காட்சிகளை தவிர்த்து சிறப்பாகவே உள்ளது.

அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இரண்டே கதாபாத்திரங்களை வைத்து ஒரு த்ரில்லர் கதையை சொல்ல முயன்றிருக்கிறார். எடுத்து கொண்ட பாத்திரங்களுக்கு ஏற்ற நாயக, நாயகியரை தேர்வு செய்த விதத்தில் ஈர்க்கும் பரத், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். முதல் பாடல் தேவையில்லாத திணிப்பாக தெரியும் நிலையில், படத்தின் இடைவேளைக்கு சற்று முன்னர் படம் விறுவிறுப்பாகிறது. அதன் பின்னர் இரண்டாம் பாதி முழுவதுமே பரபரப்பாக சம்பவங்கள் கண் முன்னே நடந்தேறினாலும் அந்த காயத்ரி - ஆதிக் பகுதி அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை. வாழ்க்கையையே மாற்றும் முடிவை எடுக்கும் அளவுக்கு ஒரு கனமான காரணம்/ கதை அல்லது சம்பவங்களை காட்டாமல் வெறும் வசனங்களால் சொல்லியிருப்பது, அந்த காதாபாத்திரத்தின் மீது நமக்கு பரிதாபமோ அதனோடு ஒரு ஒட்டுதலோ இல்லாமல் போக செய்கிறது. அருள்நிதியும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் கதாபாத்திரங்களை உணர்ந்து அழகாக நடித்து கொடுத்துள்ளனர், சாம்.சி.எஸ் பின்னணி இசையில்  திகிலூட்ட, அரவிந்தின் ஒளிப்பதிவு தரமாக காட்சிகளை பதிவு செய்ய என தொழில்நுட்ப ரீதியாக கே-13  மிகவும் சிறப்பாக வந்திருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகள் நம்மை பாதிக்காமல் செல்வதால்  படத்தின் பாதிப்பு சற்றே குறைகிறது. இருந்தாலும், இரண்டே கதாபாத்திங்கள், ஒரு அபார்ட்மெண்ட், தரமான நடிப்பு, சில குறைகள், தொய்வுகளை தாண்டி ரசிகர்களை கட்டிப்போடும் விதத்தில் அமைந்துள்ள இரண்டாம் பாதியின் திரைக்கதை, இவற்றிற்காக கே-13 படத்தை பார்க்கலாம். 

Rating: 2.75 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE