Download App

Kadugu Review

கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘கோலி சோடா’ படத்தை தயாரித்து இயக்கிய விஜய் மில்டன் இப்போது ‘கடுகு’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.  கதையின் நாயகனாக ராஜகுமாரன், வில்லனாக பரத் தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல் படத்தில் கவனம் ஈர்த்த ராதிகா பிரசித்தா என நடிக-நடிகையர் தேர்வே படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கவைத்தது. இந்தப் படத்தை நடிகர் சூர்யா வாங்கி வெளியிடுவது எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கவைத்தது.

சமுதாயத்தின் மிகச் சிறிய அங்கமாகக்  கருதப்படும் கடுகு போன்ற ஒரு சாதாரண மனிதன், ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்த்து வலுமிக்க அதிகார்வர்கங்களை எதிர்கொள்ளும் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அதில் எந்த அளவு வென்றிருக்கிறார் என்பதை விமர்சனத்தில் காண்போம்.

கிட்டத்தட்ட அழிந்துவிட்ட பார்ம்பரிய கலையான புலிவேஷம் கட்டி ஆடும் புலி பாண்டி (ராஜகுமாரன்) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியிடம் ( இயக்குனர் வெங்கடேஷ்) உதவியாளராக வேலைபார்க்கிறான். சென்னையிலிருந்து பணி மாற்றலாகிச் தரங்கப்பாடிக்கு  செல்லும் காவல்துறை அதிகாரியு இவனையும் அழைத்துப் போகிறார். தரங்கம்பாடி காவல் நிலையத்தில் எடுபிடிபோல் இருக்கும் அனிருத் (பரத் சீனி) பாண்டியின் நண்பனாகிறான். அதோடு உள்ளுரில் ஆசிரியையாக இருக்கும் எபி (ராதிகா பிரசித்தா) பாண்டியால் ஈர்க்கப்பட்டு அவனுடன் ஃபேஸ்புக்கில் நட்புகொள்கிறாள். அவனிடம் அவளது சோகமான முன்கதையைப் பகிர்ந்துகொள்கிறாள். பாண்டி, எபி யார் என்று தெரியாமல் அவள் மீது காதல்கொள்கிறான்.

உள்ளுரில் செல்வாக்கு மிக்க நபராகவும் புஜபலம் பொருந்திய பாக்ஸராகவும் விளங்கும் நம்பி (பரத்) தனது அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டு சில நல்ல செயல்கள் செய்து ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்குகிறான். தன் அரசியல் கனவுகளுக்காக ஒரு மிகப் பெரிய குற்றத்துக்கு துணைபோகிறான்.

இதனால் உடல் பலமும் செல்வாக்கும் பொருந்திய நம்பியை தன் உயிரைப் பணயம் வைத்து எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான் பாண்டி. அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்ட எபியும்  நம்பியால் வேறொரு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனிருத்தும் பாண்டிக்கு துணை நிற்கிறார்கள்.

இறுதியில் வென்றது சாதாரண மனிதனின் நீதியா செல்வாக்கு மிக்கவனின் அநீதியா?

’கடுகு’ படத்தின் ஆகப் பெரிய பலம் வசனங்கள். குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்குப் பின் பேசப்படும் வசனங்கள் அனைத்தும் பலத்த கைதட்டல்களைப் பெறுவதோடு நீண்ட நேரத்துக்கு மனதில் நிற்கின்றன.  யார் உண்மையான ஹீரோ யார் ஜோக்கர்  யார் வில்லன் என்பதைச் சொல்லும் வசனம், படம் சொல்ல வந்த செய்தியை மிக அழுத்தமாகப் பதிவுசெய்வதில் வெற்றியடைகிறது.  படத்தின் மற்ற பகுதிகளிலும் மனதை நெகிழவைக்கும் உணர்வுப் பூர்வமான வசனங்களும் ஆங்காங்கே சிரிப்பையோ புன்னகையோ வரவைக்கும் காமடி வசனங்களும் ரசிக்கவைக்கின்றன.

பாண்டி மீது எபி ஈர்ப்புகொள்வதற்கு முதலில் ஒரு வழக்கமான காரணம் சொல்லப்பட்டாலும் அதற்குப் பின் சொல்லப்படும் எபியின் முன்கதை அந்த ஈர்ப்பையும் அவர்களுக்கிடையில் முகிழும் பரிவு கலந்த அன்பையும் நம்பகத்தன்மையுடன் பதிவு செய்கிறது. ஆனால் அந்த முன்கதையை 2டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சொல்லியிருப்பதன் மூலம் அது ஏற்படுத்தியிருக்க வேண்டிய உணர்வழுத்தம் மட்டுப்படுகிறது.

நம்பி, தன் சாதியைப் பயன்படுத்தி அரசியல் செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதை உணர்த்த. அவன்சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் மனிதர்களுடன் பழகுவான் என்பது அவனது முதல் காட்சியிலேயே  பூடகமாக உணர்த்தப்பட்ட விதம் ஒரு நல்ல டச்.

சமுதாயத்துக்கு ஒரு மெஸேஜ். நல்ல வசனங்கள், ஒரு சில நல்ல காட்சிகள் மட்டுமே ஒரு படத்தைக் காப்பாற்றிவிட முடியாது. இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான ஓட்ட நேரம் கொண்ட படம் மிகப் பெரிய படம் பார்ப்பது போன்ற ஆயாசத்தைத் தருகிறது. படம் அதன் மையப் புள்ளிக்கு வருவதற்கு மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. பாண்டியை மிக மிக நல்லவனாகக் காட்டுவதற்கென்றே முதல் பாதியின் பல காட்சிகள் வீணடிக்கப்படுகின்றன.

படத்தின் பெரும்பாலான நிகழ்வுகள் திரைக்கதை ஆசிரியரின் வசதிக்கேற்ப செறுகப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் தேவைக்கதிகமாக நீண்டு பொறுமையை சோதிக்கின்றன.

படத்தின் மையக் கருவாக விளங்கும் அந்தக் குற்றம் நடக்கும் விதம் அதுவும் அதில் ஒரு அமைச்சரே நேரடியாக ஈடுபடுவது போல் காட்டுவது துளியும் நம்பகத்தன்மையுடன் இல்லை. திரைக்கதையின் மேலும் சில முக்கியமான சம்பவங்கள் இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற சித்தரிப்புகளால் வலுவிழக்கின்றன.  இதுவே ஒட்டுமொத்த படத்தின் மீதான ஈர்ப்பைக் குறைப்பதில் பெரும்பங்காற்றுகிறது.

ராஜகுமாரன் பாத்திரத்தை உணர்ந்து நேர்மையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். புலியாட்டம் போடும் காட்சியிலும் இறுதி சண்டைக் காட்சியிலும் அவரது பாராட்டத்தக்க கடின உழைப்பு தெரிகிறது. இருந்தாலும் மற்ற காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பும் முக பாவங்களும் ஏமாற்றத்தைத் தருகின்றன.

பரத், கட்டுக்கோப்பான உடலால் மட்டுமில்லாமல் தேர்ந்த நடிப்பாலும் வசீகரிக்கிறார். சுயநலத்துக்காக ஒரு குற்றத்துக்கு துணைபோய்விட்டதால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  தனது ஒரே உறவான வளர்ப்புப் பாட்டியிடன் அன்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் இடங்களில் ரசிக்கவைக்கிறார்.

ராதிகா பிரசித்தா இந்தப் படத்திலும் தேர்ந்த நடிப்பைத் தந்துள்ளார். அமைச்சரின் குற்றத்தால் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் சிறுமி கண்ணில் மிரட்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தி மனதில் பதிகிறார்.  அறிமுக நடிகர் பரத் சீனி,  பாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு தரங்கம்பாடியைக் கண்முன் நிறுத்துகிறது.  நீண்டுகொண்டே போகும் காட்சிகளை வைத்துக்கொண்டு தன்னால் முடிந்த அளவு சிறப்பான பணியை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம். சுப்ரீம் சுந்தர் வடிவமைத்திருக்கும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி சபாஷ் போடவைக்கிறது.

அருணகிரியின் பாடல்கள் இடைச்செறுகல்களாக வந்துபோகின்றன. அனூப் செலினின் பின்னணி இசையும் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் ஒரு சில நல்ல காட்சிகள், அழுத்தமான வசனங்கள், நல்ல மெசேஜ் ஆகியவை இருந்தாலும் ஒரு படமாக ஈர்க்கத் தவறுகிறது ‘கடுகு’. தேவைக்கதிகமாக நீளும் காட்சிகள், கதையின் முக்கிய நிகழ்வுகளின் நம்பகத்தன்மை இல்லாத சித்தரிப்புகள் ஆகியவை இதற்குக் காரணமாக அமைகின்றன.

Rating : 2.0 / 5.0