Download App

Kalakalappu 2 Review

கலகலப்பு -  நகைச்சுவை கொண்டாட்டம்

கடந்த பத்து ஆண்டுகளில் வந்த காமெடி படங்களிலேயே மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது 2012ல் வந்த கலகலப்பு தான் . அந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி வேறு நடிகர் நடிகையரை வைத்து அதன் இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறார். கலகலப்பு2 முதல் பாகத்தின் வசூலையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஜெய் விரக்தியில் இருக்கும் இளைஞர் தன் குடும்பத்தை நடு தெருவில் விட்டு சன்யாசம் சென்ற தந்தையை வெட்ட போக அவர் காசியில் பத்து கோடி ருபாய் மதிப்புள்ள பரம்பரை சொத்து இருப்பது தெரிந்து அதை மீட்க செல்கிறார். காசியில் ஒரு மேன்ஷன் நடத்தும் ஜீவாவுடன் தங்குகிறார். ஜீவா தன் தங்கைக்கு எப்படியாவது சன்யாசம் போக எண்ணும்  சதீஷுக்கு திருமணம் முடித்து அவருடைய தங்கை காதரின் திரேசாவை கைப்பிடிக்க நினைக்கிறார். தமிழ் நாட்டில் முன்னாள் மந்திரி மதுசூதனனின் அணைத்து ரகசியங்களையும் அடங்கிய லாப் டாப்பை ஆடிட்டர் முனீஸ்காந்த் லவுட்டிக்கொண்டு காசி செல்கிறார். அவரை சுட்டு பிடிக்க போலீஸ் அதிகாரி ராதாரவியும் செல்கிறார். இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் காசியில் இணைய அதன் பிறகு நடப்பதெல்லாம் களேபரம்தான். இவர்கள் பத்தாததுபோல் யோகி பாபு,  ரோபோ ஷங்கர் , வி டி வி கணேஷ் , மனோபாலா , ஜார்ஜ் , சதீஷ்,  சிங்கமுத்து சிங்கம்புலி என்று ஆளாளாளுக்கு வந்து காமடி தர்பார் செய்து கலகலப்பு 2 வை சிறப்பாக்குகிறார்கள்.

ஜீவாவுக்கு கலகலப்பு ௨ ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்திருக்கிறது . கமர்ஷியல் ஹீரோவுக்கான காதல், நடனம் ,காமடி , அதிரடி சண்டை என்று அணைத்து ஏரியாவிலும் அசத்துகிறார். எமோஷனல் ஹீரோவாக வரும் ஜெய்யும் வழக்கம் போல் தன் பணியை செவ்வனே செய்து முடிக்கிறார். அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாள் தான் வருகிறார் அவருடைய என்ட்ரிக்கு காத்து இருக்கும் தியேட்டர் விசில் மழையில் அதிர்கிறது. அவரும் தன் பாணி பஞ்ச் வசனங்கள் உதிர்த்து அலட்டிக்கொள்ளாத உடல் மொழி மூலம் அணைத்து காட்சிகளிலும் சிரிப்பை வரவழைக்க தவறவில்லை . இடைவேளைக்கு பிறகு படத்தை தூக்கி நிறுத்துவதும் இவர்தான். கதாநாயகிகள் நிக்கி கல்ராணி மற்றும் காதரின் தெரேசா அரை குறை ஆடைகளில் வலம் வந்து இளம் ரசிகர்களை கிறங்கடிக்க செய்கிறார்கள். ஒன்றுக்கு நான்கு பாடல்களில் குத்தாட்டம் போடுகிறார்கள். படத்தின் இன்னொரு பெரிய ப்ளஸ் யோகி பாபு. நிஜ வாழ்க்கை சர்ச்சை சாமியார் ஒருவரை கண் முன் நிறுத்தி களேபரம் செய்கிறார். கிளைமாக்சில் ஒரு அதிரடி ஆக்க்ஷன் செய்தும் சிரிக்க வைக்கிறார். முந்தைய பாகத்தில் சிரிப்பு போலீசாக வந்த ஜார்ஜ் இதில் கூடுதலாக அம்மாவாசை வந்தால் வெறி பிடிப்பவராக வந்து பின்னி பெடல் எடுக்கிறார் பாவம் ராதாரவி அவரிடம் மாட்டி கொண்டு கந்தல் ஆவது குபீர் சிரிப்பதை வரவழைக்கிறது. ரோபோ ஷங்கர் முனீஸ்காந்த் வி டி வி கணேஷ் மனோபாலா சதீஷ் சிங்கம் புலி சிங்கமுத்து மதுசூதனன் என்று அனைவருக்குமே முத்திரை பதிக்க காட்சிகள் இருக்கின்றன.

சுந்தர் சியின் களம் காமடி அதில் ரவுண்டு கட்டி அடிக்கிறார். வழக்கம் போல கடைசி அரை மணி நேரம்  அத்தனை கதாபாத்திரத்தையும் ஒரே இடத்தில வரவழைத்து இடைவிடாத சிரிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாதி நட்சத்திர கூட்டத்தை அறிமுகம் செய்யவும் கதை போக்கை நிலை நிறுத்தவும் பயன்பட்டிருக்கிறது. காட்சிகள் எல்லாமே வண்ணமயமாக இருப்பதும் ப்ளஸ்.

படத்திற்கு மைனஸ் என்று பார்த்தால் ஐந்து தடங்களில் கதை நகர்வதால் ஏற்படும் தொய்வு அலுப்பு தட்டுகிறது. முன் பாதியில் வரும் ஒரே மாதிரியான மூன்று டூயட்களில் தாராளமாக இரண்டையும் இன்னும் சில தேவையில்லாத காட்சிகளையும் வெட்டினால் படத்தை இன்னும்  விறுவிறுப்பாக கொண்டு செல்ல  முடியும் . முதல் பாகத்தில் அணைத்து வித காமெடியும் சிறப்பாக அமைந்தது ஆனால் இதில் யோகி பாபு ரோபோ ஷங்கர் முனீஸ்காந்த் வி டி வி கணேஷ் போன்றவர்கள் அடி  வாங்கியே காமடி செய்வது ஒரு கட்டத்துக்கு மேல்  எரிச்சலாக மாறுகிறதை மறுப்பதற்கில்லை.

ஹிப் ஹாப் தமிழா ஆதி ராப் காணா குத்து என  வகைக்கு ஒரு பாடல் தந்திருக்கிறார் அனைத்துமே படத்தில் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருந்தாலும் மனதில் நிற்கவில்லை ஆனால் பின்னணி இசையில் ஒரு காமடி படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக தந்திருக்கிறார். யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவில் கலர் கலராக காட்சிகள் நகர்கின்றன காமெடிக்கேற்ற காமிரா கோணங்களும் இரண்டு கதாநாயகிகளின் இளமையும் எடுத்து காட்ட தவறவில்லை. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் நீளமான காட்சிகள் பலவற்றை சுருக்கியிருக்கலாம் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை கட்டி மேய்த்து ஒவ்வொருவருக்கும் கச்சிதமான பாத்திரங்கள் கொடுத்ததில் தெரிகிறது சுந்தர் சியின் அனுபவ இயக்கம் ஆனால் அதே சமயம் தானே கலகலப்பில் பதித்த சிறப்பு முத்திரையை இதில் தவறவிட்டிருக்கிறார் எனபதும் நிதர்சனம்.

Rating : 2.8 / 5.0