மனசாட்சியுடன் சாட்சி சொன்ன ரேவதி: திரையுலக பிரபலங்கள் பாராட்டு 

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதும் உலுக்கியது. பிபிசி உள்பட பல சர்வதேச ஊடகங்களும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு காரணமாக சாத்தான்குளத்தில் உள்ள ஒட்டுமொத்த காவலர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும் ஒரு சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக நேற்று இது குறித்த வழக்கின் விசாரணை மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்ற போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ரேவதி அவர்கள் சொன்ன சாட்சி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விடிய விடிய காவல்துறையினர்களால் தாக்கப்பட்டதாகவும் காவல் நிலையத்தில் உள்ள டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக்கறை இருந்ததாகவும் அவர் தனது சாட்சியில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து தைரியமாக மனசாட்சியுடன் சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. டுவிட்டரில் ரேவதி பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்ட அது டிரெண்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் குறித்து தைரியமாக சாட்சி கூறிய காவலர் ரேவதி அவர்களுக்கு கமல்ஹாசன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

அதேபோல் கமல்ஹாசனை அடுத்து இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் ரேவதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன்...
உங்களோடு தேசம் துணை நிற்கிறது