ரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி!

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

சமூக வலைதளங்களில் தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் எவ்வாறு மோதிக் கொள்கின்றார்களோ அதேபோல் பல ஆண்டுகளாக கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிடக் கூட்டணிகளை சமாளிக்க கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் ரீதியில் இணைய முடிவு செய்ததும், முதல் கட்டமாக தங்களது ரசிகர்களை படிப்படியாக சமாதானம் செய்ய முடிவு செய்தனர்

இதனையடுத்து இரு தரப்பு ரசிகர்களையும் இதற்காக தயார் செய்ய முதல்கட்டமாக ’தர்பார்’படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசனை வைத்து அவரது பிறந்தநாளில் வெளியிட வைத்தார் ரஜினிகாந்த். இதனால் கமல், ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களும் ஓரளவுக்கு சமாதானமாகி இரு தரப்பினர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் ’கமல் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார். எங்களை வைத்து நீங்கள் இருவரும் சண்டை போட வேண்டாம் என்றும், நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்றும், கொள்கைகளில் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும் எங்கள் நட்பை பிரிக்க முடியாது என்றும் கூறி இரு தரப்பு ரசிகர்களையும் ஒற்றுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனால் பல ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொண்டனர்

இந்த நிலையில்தான் நேற்று திடீரென இருவரும் தனித்தனியே ஒரே மாதிரியாக பேட்டியளித்தனர். தமிழக மக்களின் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து அரசியலில் செயல்பட தயார் என்று கமல்ஹாசனும், அதே போன்ற ஒரு கருத்தை ரஜினிகாந்தும் ஒருசில நிமிட இடைவெளியில் கூறியுள்ளனர்

எனவே ஒருவழியாக தற்போது இருதரப்பு ரசிகர்களும் கிட்டத்தட்ட ஒற்றுமை ஆகிவிட்டதாகவும், கமல், ரஜினி கொடுத்த படிப்படியான இன்ப அதிர்ச்சிகள் ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைந்தால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியை உடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்