பாமகவின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்த கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,April 06 2017]

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்த தீர்ப்பால் நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் தமிழகத்தில் 3000க்கும் அதிகமான மதுக்கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றிவிட்டு, டாஸ்மாக் கடைகளை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை தாக்கல் செய்த கே.பாலு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இன்று காலை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசி தமிழக அரசின் இத்தகைய முயற்சிகளை தடுக்க ஆதரவு கோரி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசனையும் கே.பாலு அவரது ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து கே.பாலு கூறியவதாவது:
"எங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்டச் சாலைகளாக மாற்றுவது குறித்து, அவருடைய கருத்தையும் எங்களிடம் தெரிவித்தார். அவர் பேசும்போது, 'வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான் என்பது முதுமொழி. இங்கு குடி உயர்வதைத்தான் கோன் (அரசு) விரும்புகிறது. சாமானிய மக்கள் குடித்தே, தங்களை அழித்துக் கொள்கிறார்கள். அரசுக்கு வருமானம் பிரதானமாக இருக்கிறது. தனிநபர்களின் உடல்நலம்தான் பாதிக்கப்படுகிறது' என வேதனை தெரிவித்தார். மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிகளை வரவேற்பதாகவும் கூறினார்" என்றார் பாலு.