கிராமசபை கூட்டத்தின்போது கமல் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்!

நேற்று காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் கிராமசபை கூட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடைபெற்றது. கமல்ஹாசனும் ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இக்கட்சியின் கிராமசபை கூட்டம் ஒன்றில் கட்சியின் நிர்வாகிகள் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

02.10.2019 அன்று, காலை 11 மணியளவில்‌ சின்ன தடாகம்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்‌ நடைபெற்ற கிராமசபைக்‌ கூட்டத்தில்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ சார்பாக ஏராளமானோர்‌ பார்வையாளராக கலந்துகொண்டனர்‌.

அந்த கூட்டத்தில்‌ கலந்துகொண்ட சில சமூகவிரோதிகள்‌. நம்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியைச்‌ சார்ந்த திரு.பிரபு, திரு.சுரேஷ்‌, திரு.பாபு ஆகியோரை தகாத வார்த்தைகளால்‌ திட்டியதோடு காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர்‌. இதனை அறிந்த கட்சித்‌ தலைவர்‌ நம்மவர்‌. திரு. கமல்‌ஹாசன்‌ அவர்கள்‌, தாக்குதலுக்கு உள்ளான தொண்டர்களை, தொலைபேசி மூலம்‌ தொடர்பு கொண்டு நலம்‌ விசாரித்து ஆறுதல்‌ தெரிவித்தார்‌. பின்னர்‌, துணைத்தலைவர்‌ டாக்டர்‌ மகேந்திரன்‌ அவர்கள்‌, தாக்கப்பட்டவர்களை நேரில்‌ சந்தித்து ஆறுதல்‌ கூறினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, துணைத்தலைவர்‌ டாக்டர்‌ மகேந்திரன்‌ அவர்களும்‌, கட்சியின்‌ கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்‌ பரமேஸ்வரன்‌ அவர்களும்‌ மற்றும்‌ கோவை மாவட்ட பொறுப்பாளர்களும்‌, ஏனைய நிர்வாகிகளும்‌, இச்சம்பவத்திற்கு காரணமான -சமூகவிரோதிகள்‌ மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலும்‌, காவல்துறை கண்காணிப்பாளர்‌ அவர்களிடமும்‌ நேரில்‌ புகார்‌ அளித்தனர்‌. அவர்கள்‌, விரைவில்‌ நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.