ரஜினிக்கு அரசியலை விட இதுதான் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் என்றும், அந்த சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று ரஜினியை அடுத்து இன்று கமலஹாசன் காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறி வந்த போது ரஜினி சம்பந்தப்பட்ட கேள்வியும் எழுந்தது.

ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நீங்கள் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் ’எல்லோரிடமும் நான் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா? கண்டிப்பாக ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்’ என்று கூறினார்.

மேலும் ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ரஜினிக்கு அரசியலை விட அவரது உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்றும், அவர் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்' என்றும் தெரிவித்தார். ரஜினி குறித்து கமல்ஹாசன் கூறிய இந்த கருத்து இருவரின் உண்மையான நட்பை வெளிப்படுத்துவதாக சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.