close
Choose your channels

தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன்: கமல்ஹாசன் அறிக்கை

Thursday, June 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளை புறக்கணித்து வந்தார்கள் என்றும், இன்று சூழல் மாறி மக்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள் என்றும், இதற்கு ஏற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்றும், இதனை செய்யும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு என நான் நம்புகிறேன் என்றும் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்புண்டு என கல்வியாளர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ப பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15% வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். போதிய வருவாய் இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியேனும் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்கள். ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வில் பிள்ளைகளின் கல்வி என்பது பொருளியல் சிக்கலை உருவாக்கும் ஒன்றாகவே இருந்தது.

இன்று சூழல் பெருமளவில் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும் எழுதுவதற்கும் தேவையான பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகளைத் தங்குதடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்யமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்றமுடியும்.

தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். இதைச் சாத்தியமாக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்".

இவ்வாறு கமல்ஹாசனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.