A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா? கமல்ஹாசன்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியான நிலையில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கௌசல்யாவின் தாயார் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறையினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் கௌசல்யாவின் தாய், தந்தை இருவருமே விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை ஐகோர்ட்டில் இன்று வெளியான இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், ஒருசிலர் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை என்றும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்புடையது இல்லை என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குனர் பா ரஞ்சித் உள்பட ஒருசிலர் இந்த தீர்ப்பு குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வெளியான இந்த தீர்ப்பு குறித்து உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?