கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்!

  • IndiaGlitz, [Sunday,June 07 2020]

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் பட தயாரிப்பாளர் ஒருவர் மருத்துவமனையில் இடமில்லை என அனுமதி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த சோகமான சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடித்த இந்தி படமான ‘ராஜ்திலக்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் அனில்சூரி. இவருக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள முக்கிய இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது குடும்பத்தினர் முயற்சித்தனர்.

ஆனால் அந்த மருத்துவமனைகளில் இடமில்லை என அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து அவருடைய உடல்நிலை மேலும் மோசமாகவே அதன்பின்னர் வேறொரு மருத்துவமனையில் அனில்சூரி அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன் அன்று அவர் இறந்து விட்டதாகவும் அனில்சூரியின் சகோதரர் ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அனில்சூரியின் இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே பாதுகாப்புடன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 77 வயதாகும் அனில்சூரிக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.