கமல் கட்சியுடன் கூட்டணி: இந்திய குடியரசு கட்சிக்கு 4 தொகுதிகள்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனித்து போட்டி என்று அறிவித்த நிலையில் நேற்று திடீரென இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து சற்றுமுன் மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய குடியரசு கட்சி கூட்டணி உறுதியானது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்திய குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன் கூறியபோது, வரும் மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், மக்களவை தேர்தலில் 1 தொகுதியிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்திய குடியரசு கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.