வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு இருந்த அருண்சிதம்பரம் என்பவர் சினிமாவின் மீதுள்ள மோகம் காரணமாக வேலையை உதறிவிட்டு சென்னை வந்து நடித்து, இயக்கிய படம்தான் 'கனவு வாரியம்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாவதற்கு முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்'. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெருமைகள் மட்டுமின்றி இந்த படத்திற்கு இன்னொரு பெருமையும் உள்ளது. 93 வருட பாரம்பரியம் மிக்க உலகின் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் 'கனவு வாரியம்' திரைப்படத்தை தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் வெளியிடுகிறது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் முதல் தென்னிந்திய திரைப்படம் இதுதான்.
குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை டிசிகாப் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அருண்சிதம்பரம், அறிமுக நாயகி ஜியா, இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்திகுமாரி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷியாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார்,