எதையும் சந்திக்க தயார்! ஐடி ரெய்டுக்கு பின் கனிமொழி பேட்டி!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:

இரவு 8.30 மணியளவில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்ய ஐடி அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் சோதனை செய்ய உரிய ஆவணங்கள் இருக்கின்றதா? பெண்கள் தங்கியிருக்கும் அறையில் இரவில் சோதனை செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்களிடத்தில் சரியான பதில் இல்லை. இருப்பினும் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். ஒரு மணி நேரம் சோதனைக்கு பின் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்றும், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், தங்களுக்கு தவறான தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டனர். மேலும் அதிகாரிகள் தங்கள் கேள்விக்கு பதிலளிக்குமாறு என்னிடம் சம்மன் கொடுத்தனர். இது சட்டத்திற்கு புறம்பானது என்று வாதிட்டேன்.

வேலூரில் சட்டத்திற்கு புறம்பாக தேர்தலை நிறுத்தியது போல் தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்த செய்யப்படும் சதியாகவே நான் இந்த சோதனையை பார்க்கின்றேன். ஆனால் இதற்கெல்லாம் பயப்படும் கட்சி அல்ல திமுக, எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றோம். எங்கள் வீட்டில் சோதனை செய்யும் அதிகாரிகள், கோடி கோடியாக வீட்டில் வைத்திருக்கும் தமிழிசை வீட்டில் சோதனை செய்ய தயாரா? என்று ஐடி அதிகாரிகளுக்கு சவாலாக விடுக்கின்றோம். தோல்வி பயத்தாலும், எதிர்க்கட்சி வேட்பாளரை அச்சுறுத்தவும்தான் இந்த சோதனை நடந்துள்ளது.

இவ்வாறு கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.