மாஸ்க் அணியாததால் தனக்குத்தானே அபராதம் விதித்து கொண்ட போலீஸ் ஐஜி

மாஸ்க் அணியாததால் தனக்குத்தானே ரூ.100 அபராதம் விதித்து கொண்ட போலீஸ் அதிகாரி ஐஜி அவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கான்பூர் போலீஸ் ஐஜி மொஹித் அகர்வால் என்பவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்த நடவடிக்கைகள் குறித்த சோதனைக்கு சென்றார். அப்போது அவர் வாகனத்தில் இருந்து இறங்கி சக போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்போது தான் அவர் திடீரென தான் மாஸ்க் அணிய வில்லை என்பதை உணர்ந்தார். உடனடியாக அவர் தனது வாகனத்தில் உள்ள மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டார். இருப்பினும் மாஸ்க் அணியாமல் வாகனத்திலிருந்து இறங்கி சக போலீஸ் அதிகாரிகளிடம் பேசியதற்காக அவர் தனக்குத்தானே ரூபாய் 100 அபராதம் விதித்து கொண்டார். அதற்குரிய செலானில் கையொப்பமிட்டு ரூ.100 செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் அவ்வாறு சென்றால் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ள நிலையில், தானே ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காக தனக்கு தானே அபராதம் விதித்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஐஜி மொஹித் அகர்வாலின் நேர்மையை காவல்துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது