4 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட பலே கில்லாடிகள்!!! மோப்பம் பிடித்த போலீஸ்!!!

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா பகுதியில் 4 ஏக்கர் விளைநிலத்தில் கஞ்சா பயிரிட்டு இருந்ததை அறிந்து போலீஸார் அவற்றை பறிமுதல் செய்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மொலாசு மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்ரதுர்கா பகுதியில் உள்ள அனைத்து விளைநிலங்களையும் சோதனையிட்டு இருக்கின்றனர். அச்சோதனையில் 4 ஏக்கர் விளைநிலத்தில் சுமார் 1 கோடி மதிப்பிலான கஞ்சா பயிரிட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பல்லாரி மாவட்டம் சண்டுரைச் சார்ந்த ருத்தேஷ் என்பவர் கூடலகியைச் சார்ந்த சுமந்தின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் கஞ்சாவை பயிரிட்டு இருக்கிறார். இச்செயலுக்கு ராமப்புராவைச் சார்ந்த மஞ்சுநாத் மற்றும் ஜம்புநாத் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இச்செயலில் தொடர்புடைய 4 பேரையும் போலீஸார் கைது செய்து கடுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விளைநிலங்களில் இருந்த கஞ்சா செடியை போலீஸார் வெட்டியெடுத்து அதை லாரிகளை வைத்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. விளைச்சல் நிலங்கள் அதிகமாக உள்ள பகுதியில் இவ்வளவு தைரியமாக கஞ்சா செடியை பயிரிட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வனத்துறையினருக்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற ரீதியில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கர்நாடக திரைத் துறையினருக்குத் தொடர்பு இருக்கிறது என கடும் பரபரப்பு நிலவிவரும் சூழலில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிட்ட சம்பவம் மேலும் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.