குடிதண்ணீரை வீணாக்கினால் ரூ.5000 அபராதம்.. கோடை தொடங்கும் முன்பே தலைவிரித்தாடும் பஞ்சம்..!

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

கர்நாடக மாநிலத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுவதாகவும் இந்த நிலையில் குடிதண்ணீரை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அல்லது வீணாக்கினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மழை பொய்த்து விட்டதன் காரணமாக கடும் குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் நிலத்தடி நீர் மிகவும் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் வீட்டின் ஆழ்துளை கிணற்றில் கூட தண்ணீர் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தண்ணீர் கேன் வாங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாங்கி வருவதாகவும் லாரி தண்ணீர் விலை 5 மடங்கு உயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் குடிதண்ணீரை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக கார்கள் கழுவ, தோட்டத்திற்கு, கட்டுமான பணிக்கு, சாலைகள் அமைக்கும் பணிக்கு பயன்படுத்த குடிநீர் வாரியம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த டிசம்பர் மாதம் நல்ல மழை பெய்து அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளதால் சென்னை உள்பட பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது