close
Choose your channels

Karuppan Review

Review by IndiaGlitz [ Friday, September 29, 2017 • தமிழ் ]
Karuppan Review
Cast:
Vijay Sethupathi, Tanya, Bobby Simha, Kishore, Pasupathy, Singampuli, Renuga Kaveri, Sharath Lohitashwa
Direction:
R. Panneerselvam
Production:
A. M. Rathnam , S. Aishwarya
Music:
D. Imman

கருப்பன் -  மண் மணமில்லாத கிராமிய மசாலா

தமிழ் சினிமாவின் மிக சிறந்த படங்களில் ஒன்றான ரேணிகுண்டாவை இயக்கிய பன்னீர்செல்வம் ரசிகர்களின் இன்றைய ஆதர்ச கதாநாயகன் விஜய் சேதுபதியுடன் கருப்பனில் கைகோர்த்திருப்பது எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது. படம் பண்ணீரின் திறமையையும் மக்கள் செல்வனின் கதை தேர்வு செய்யும் திறனையும் பறைசாற்றும்படி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முரடரான கருப்பன்  ( விஜய் சேதுபதி) ஒரு மாடு பிடி வீரர் மற்றும் ஊதாரியாக மாமாவுடன் ( சிங்கம் புலி) ஊர் சுற்றுபவர். அந்த ஊரிலேயே பெரிய மனிதனான மாயி ( பசுபதி)  தன் காளையை யாராலும் அடக்க முடியாது என்று உதார் விட கருப்பனின்நண்பர்கள் அவன் தங்கை அன்புவை (தான்யா ரவிச்சந்திரன்) பணயம் வைக்க ஏற்றி விட கருப்பன் மாட்டை அடக்கிவிடுகிறான். முதலில் அவனை திருமணம் செய்ய வற்புறுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லும் அன்பு பின் சம்மதிக்க கல்யாணம் நடக்கிறது. அவளுக்காகவே சின்ன வயதிலிருந்து காத்திருக்கும் முறை மாமன் கதிர் ( பாபி சிம்ஹா) ஹீரோவுடன்  நட்புடன் பழகி நரித்தனம் செய்கிறார்.  அன்பு எப்படி கருப்பனை விரும்பி ஏற்று அவனை நல்வழி படுத்துகிறாள் கதிரின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்தார்களா அல்லது வென்றார்களா என்பதே மீதி கதை.

 

கறுப்பனாக விஜய் சேதுபதி மீண்டும் தன் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார். புத்தி சுவாதீனம் குறைந்த தாயுடன் பாசம் காட்டுவது,. மனைவியிடம் கொஞ்சி சரணடைவது , மாமாவுடன் சேர்ந்து கொண்டு பழைய பாடல்கள் பாடி ரணகளம் செய்வது என்று அசத்துகிறார். மனைவி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று தெரிந்து பதறி ஓடி வந்து தான் ரெட்டை குழந்தைகளுக்கு அப்பாவாக போகிறோம் என்று தெரிந்தவுடன் அவர் காட்டும் முகபாவனை டாப் கிளாஸ். மாடு பிடிப்பதிலும் சண்டை காட்சிகளிலும் அதிகம் உழைத்திருப்பது தெரிகிது. பாபி சிம்ஹாவுக்கு இது ஒரு நல்ல ரீ எண்ட்ரீ. விஜய் சேதுபதியை முகத்துக்கு நேராக நண்பனை போல் பாவித்து பின்னால் வெறுப்பை கக்குவது சின்ன சின்ன முக பாவனைகளிலேயே வில்லத்தனத்தை தெறிக்க விடுவது என்று சபாஷ் சொல்ல வைக்கிறார். கடைசி மூச்சில் ஐ லவ் யு என்று சொல்லி விழும்போது அனுதாபத்தையும் சம்பாதிக்கிறார். இளம் நடிகை தான்யா கனமான கதாபாத்திரம் ஏற்று அருமையான நடிப்பை வெளிப்பதுத்தியிருக்கிறார். கணவனிடம் கொஞ்சுவது கோபத்துடன் கண்டிப்பது அண்ணனிடம் பாசத்தை பொழிவது என்று அணைத்து காட்சிகளிலும் கவர்கிறார். இயக்குனர் தான் தைரியமான கிராமத்து பெண்ணாய் அவரை சித்தரித்து விட்டு  ஒரு காட்சியில் தற்கொலை செய்ய கிணற்றில் குதிக்க விட்டு அவர் கதாபாத்திரத்தின் கனத்தை வயிற்றில் வளரும் குழந்தைகளோடு சேர்த்து கொன்று புதைக்கிறார். பசுபதி மற்றும் சிங்கம் புலி தேர்ந்த நடிப்பை காட்ட அவர்களுக்கென்று காட்சிகள் உண்டு. சில வருடங்களுக்கு முன் கதாநாயகியாக இருந்த காவேரி அண்ணியாக இதில் அவதாரமெடுத்திருக்கிறார்.

கருப்பனில் கவரும் முக்கியமான விஷயம் சென்டிமெண்ட்கள் விஜய் சேதுபதி தான்யாவுக்குள்ள கணவன் மனைவி உறவு தான்யாவுக்கும் அன்னான் பசுபதிக்கு உள்ள பாச பிணைப்பு மகன் அம்மா பாசம் தாய் மாமன் மாப்பிள்ளை பாசம் மற்றும் முரண்பாடான பாபி சிம்ஹாவின் காதல். இது கொஞ்சம் பழைய ஸ்டைல் என்றாலும் அதை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

 

படத்தில் மிக பெரிய மைனஸ் விஜய் சேதுபதி உட்பட வலுவற்ற கதாபாத்திர படைப்புகள். கிராமத்திலேய பெரிய மனுஷரும் பணக்காரருமான பசுபதி தன் உயிருக்கு உயிரான தங்கையை ஒரு ஊதாரி குடிகாரனுக்கு அதுவும் அவனே வேண்டாம் என்று சொன்ன பிறகும் கொடுப்பாரா என்ற கேள்வியும் தன் வீட்டிலேயே விசுவாசமாக வளரும் பாபி சிம்ஹாவை தவிர்ப்பதற்கும் சரியான காரணம் இல்லை. பாபி சிம்ஹாவும் கல்யாணம் நடக்கும்போது சும்மா இருந்துவிட்டு அதற்கு பிறகு கதாநாயகியாயி அடைய நினைத்து திட்டம் போடுவதும் ஏற்கும்படியாக இல்லை. இதே போல மாடு பிடி ஆளை கல்யாணம் செய்ய வற்புறுத்தினால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டும் தான்யா பின் ஒரு சப்பைக்கட்டு பிளாஷ் பேக் சொல்லி அதனால்தான் ஏற்கனவே கருப்பனை பிடிக்கும் என்று சொல்வது அபத்தம். ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு படுத்தவே ஹீரோவுக்கு மாடு பிடி வீரன் வேடம் தந்திருப்பதாக அப்பட்டமாக தெரிவதும் அதே போல் விஜய் சேதுபதியை திடீர் விவசாயி ஆக்கி திணிப்பு செய்ததும் திரைக்கதையை விட்டு தொக்கி நிக்கிறது. மதுரையில் நடக்கும் கதையில் கொஞ்சம் கூட அந்த மண் மணம் இல்லாதிருப்பதும் மைனஸ் தவிர விஜய் சேதுபதி பாபி சிம்ஹா மற்றும் வில்லன் சரத் லோஹிட்டாஸ் ஆகியோர் வசன உச்சரிப்பும் கதை காலத்தை அந்நிய படுத்துகின்றன.

படத்துக்கு பெரிய பலம் டி இம்மனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அதே போல் ஒளிப்பதிவு எடிட்டிங் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞியார்களின் பங்கும் கச்சிதம். இயக்குனர் பண்ணீர்செல்வம் ரேணிகுண்டா மூலம் தமிழ் சினிமாவை ஒரு ஆதி மேலே கொண்டு சென்றார் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் இந்த படம் மூலம் சில படிகள் பின்னோக்கி பயணித்திருக்கிறார் என்பதே உண்மை.

விஜய் சேதுபதி பாபி சிம்ஹா மற்றும் தன்யாவின் நடிப்புக்காகவும் இமானின் இசைக்காகவும் பார்க்கலாம்

Rating: 2.25 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE