close
Choose your channels

காஷ்மீர் அரசியலில் வெற்றிடம் நிலவுகிறதா??? ஒரு சிறப்பு பார்வை

Monday, February 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஷ்மீர் அரசியலில் வெற்றிடம் நிலவுகிறதா??? ஒரு சிறப்பு பார்வை

 

ஜம்மு & காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப் பட்டு ஆறுமாதங்கள் ஆகின்றன. தற்போது, இந்திய நிர்வாகத்தின் கீழ் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. சிறப்பு சட்டப் பிரிவு ரத்து செய்யப் பட்ட நிலையில் காஷ்மீரில் மக்கள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பாக பேரணி கூட்டங்களை நடத்தின. பெரிய அளவிலான கிளர்ச்சியைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு சில நேரங்களில் ஊரடங்கு உத்தரவினையும், இணையம் மற்றும் செல்பேசி சேவைகளைத் துண்டித்தும் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர்.

தற்போது வரை அரசியல் தலைவர்களது வீட்டுக் காவலும், கண்காணிப்பும்  காஷ்மீரில் பெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி விட்டதாக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. அரசியல் முன்னேற்றத்தை மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தொண்டர்களையும் இது முடக்கியுள்ளது. தொண்டர்கள் வெளியே இருந்து கொண்டு தங்கள் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எதைக் குறித்தும் முடிவு எடுக்க முடியாமல் ஒத்துழைப்பு இன்றி, அரசியல் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர்.

“நாட்டின் ஒருமைப்பாட்டுக்காவும் ஒற்றுமைக்காகவும் தங்கள் வாழ்க்கை குறித்துகூட கவலைப்படாமல் துணிந்து, செயல்பட்டவர்கள் இன்று சிறையில் உள்ளனர். இது அதிர்ச்சியாக மட்டுமல்ல வினோதமாக இருக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் தடுப்பு காவலைக் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப் படுகின்ற வேளையில் மற்ற கட்சிகளின் வலுவைக் குறைப்பதற்காகவே பா.ஜ.க. இந்தச் செயல்களில் ஈடுபடுவதாகவும் கருத்துக் கூறப்பட்டு வருகின்றன.

ஒருபக்கம், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீரில் பா.ஜ.க. தனது அரசியல் களத்தினை வலுப்படுத்தி கொள்ளுமா? என்பதைக் குறித்த விவாதங்களும் தொடர்கின்றன.  

காஷ்மீரில் 5 ஆகஸ்ட் 2019 இல் இருந்து செல்பேசி, இணைய சேவை முடக்கப் பட்டது. இதனைக் குறித்து நாடு முழுவதும் பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜனவரி 18 ஆம் தேதி செல்பேசி அலைவரிசைகள் செயல்பாட்டிற்கு வந்தன. ஆனாலும் இணைய வசதிகள் வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காஷ்மீரில் கால வரையறையின்றி, இணைய வசதி முடக்கப் படுவதை ஒத்துக் கொள்ளமுடியாது எனக் குறிப்பிட்டு உள்ளனர். எனவே ஞாயிற்றுக் கிழமையான நேற்றில் இருந்து இணைய வசதிகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் வேலை செய்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி உள்ளபோதும் இராணுவப் பாதுகாப்புகள் தொடர்ந்து நீடிக்கிறது. அரசு தரப்பில் இருந்து இதுவரை ஒரு தோட்டா கூட பயன்படுத்தப் பட வில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒடுக்குமுறைகள் எதுவும் மக்கள் மீது திணிக்கப் படவில்லை என்றும் மக்கள் அமைதியான முறையில் நடைமுறை வாழ்வை மேற்கொள்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது, சந்தைகள் திறக்கப் பட்டு பல கடை மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.  பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் அம்மாநிலம் முழுவதும் இயக்கப் படுகின்றன.  ஆனாலும், வணிகர்கள் சரிவை சந்தித்து வருவதாகப் புகார் கூறுகின்றனர். “குளிர் காலத்தை ஒட்டி காஷ்மீர் பகுதிகளில் பெரும்பாலும் வணிகப் பொருட்களின் விற்பனை 50% ஆகத்தான் இருக்கும். குளிர்காலம் முடிந்த தருவாயில்தான் விற்பனை அதிகரிக்கும். 370 சட்டப் பிரிவு ரத்து நடவடிக்கையைத் தொடர்ந்து காஷ்மீரியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் 80% ஆக பொருளாதாரம் கடும் சரிவினை சந்தித்துள்ளது” என வணிகர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீர் பகுதிகளில் கடுமையான தொழில் முடக்கம் எற்பட்டுள்ளது. அதோடு இணைய, செல்பேசி முடக்கமும் சேர்ந்து, அரசுக்கு 18,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.

லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழல் தொடருகிறது. மேலும், கல்வி மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. பள்ளி மாணவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் தங்களது கல்வியைத் தொடர்ந்தனர்.

மெகபூபா முஃப்தியின் – ஜனநாயகக் கட்சி அலுவலகம் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி அலுவலகம்  இரண்டும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது அணி உருவாக்கத்திற்கு பா.ஜ.க. ஜுனைத் தலைலமையில் முயற்சிகளை மேற்கொள்ளுகிறது என்று செய்திகள் வெளியாகின.

இருவேறுபட்ட கருத்துக்கள்

சிறப்பு சட்ட பிரிவு ரத்துக்குப் பின்னர் காஷ்மீர் முழுவதும் தொடர்ந்து ஆறு மாதங்களாக அமைதியான சூழல் தொடர்கிறது. இந்த நிலைமையைக் குறித்து மத்திய அரசு, காஷ்மீர் மக்கள் 370 சட்டப் பிரிவை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனக் கூறியுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் இனிமேல் முன்னேற்ற வளர்ச்சியை எதிர்ப் பார்க்கலாம் என்ற ஒரு கருத்தும் அரசின் சார்பாக வெளியிடப் பட்டு வருகிறது. அரசியல் கட்சியினரின் வெற்று கூச்சல்களைத் தவிர்த்து விட்டு நிம்மதியான முறையில் வாழ்க்கையை மேற்கொள்ள இப்புதிய திருத்தம் வழிவகை செய்துள்ளது என சில ஆதரவு கருத்துக்கள் கூறப்படுகின்றன.

நாடு முழுவதும் சிறப்புச் சட்டப் பிரிவுக்கு எதிராக வலுவான எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டப் பிரிவினைக் குறித்து ஆதரவான தீர்ப்பினை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன. கருத்துச் சுதந்திரம் அழிக்கப் பட்டு, கருத்துக் கணிப்பு எதுவும் நடத்தப் படாமல் அமல்படுத்தப் பட்ட இந்த முடிவு மக்களின் குரல் வளையை நெறிப்பது எனவும் பலரது மத்தியில் பேசப் பட்டு வருகிறது. ஆனால் காஷ்மீர் மக்களிடத்திலும் அம்மாநில அரசியல் தலைவர்களது மத்தியிலும் அமைதியும், அரசியல் முன்னெடுப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதும் கேள்வியை எழுப்புகிறது.

இணையம், செல்போன் போன்றவை தடை நீக்கப் பட்டது வரவேற்கத் தக்கது. ஆனால் அரசியல் தலைவர்கள் கட்டுக்காவலில் இருப்பது அரசாங்கத்தின் நம்பகத் தன்மை இல்லாத நிலையையே காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

370 அரசியல் சட்டப் பிரிவு ரத்து, இணையம் – செல்பேசி துண்டிப்பு, அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவல் எனப் பல திருப்பங்களைச் சந்தித்த காஷ்மீர் மக்கள் தற்போது மிகவும் அமைதியான சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டு இருப்பதும் வரவேற்கத் தக்கது அல்ல. கடுமையான பொருளாதார வீழ்ச்சி, சுகாதார துறை நிறுவனங்கள் சீர்கேடு, மேம்பாட்டு வசதிகளில் தடுமாற்றம், வேலை வாய்ப்பின்மை, கல்வியில் மந்த நிலை என ஆறுமாதங்களில் காஷ்மீர்  பல சீர்குலைவுக்கு ஆளாகி இருக்கிறது. உமர் அப்துல்லா, மெக்பூபா முஃப்தி யின் கட்சி வேலைப்பாடுகள் முடக்கப் பட்டு உள்ளதாலும், நாடு முழுவதிலும் பா.ஜ.க. வின் கை ஓங்கி இருப்பதாலும் அங்கு உள்ள வெற்றிடத்தை இட்டு நிரப்பும் ஆர்வத்தில் துரிதமான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.