Download App

Kootathil Oruthan Review

சராசரி மனிதன் சாதனையாளானாகும் கதைதான் ‘கூட்டத்தில் ஒருவன்’ என்பது படத்தின் ட்ரைலர் மற்றும் இதர ப்ரமோஷன்க்களில் தெரிந்தது. அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கியிருப்பதாலும் பல நல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்த ட்ரீம் வாரியர் பிகசர்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதாலும் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.

அரவிந்த் (அசோக் செல்வன்) அனைத்திலும் நடுத்தரத்தில் இருக்கும் ஒரு சராசரி மாணவன். பள்ளியில் அவனது பெயர்கூட யாருக்கும் தெரியாது. வீட்டிலும்  திறமைவாயந்த அவனது அக்காவுக்கும் தம்பிக்கும் இருக்கும் மரியாதை அவனுக்கு இல்லை. எங்கும் நிராகரிப்புகளையும் அவமதிப்புகளையுமே சந்தித்து வரும் அரவிந்த்தை கடற்கரையில் சந்திக்கும்  ஜனனி (ப்ரியா ஆனந்த்) அவனது யதேச்சையான ஒரு செயலுக்காகப் பாராட்டுகிறாள். அதன் மூலம் அவள் மீது காதல் வயப்படுகிறான் அரவிந்த்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடிக்கும் ஜனனி, ஊடகப் பணிக்கான பட்டப்படிப்பில் சேரப் போவதாக தொலைக்காட்சி பேட்டியில் சொல்கிறாள். அதைப் பார்த்துவிட்டு, இலக்கில்லாதவனாக இருக்கும் அரவிந்தும் அதே படிப்பைத் தேர்ந்தெடுத்து அவள் சேரும் கல்லூரியிலேயே சேர்கிறான்.

கல்லூரியில் அரவிந்தின் காதலை நிராகரிக்கும் ஜனனி தன்னை ஈர்க்கும்படி ஏதாவது சாதித்திவிட்டு வந்தால் பார்க்கலாம் என்கிறாள். அதன் பின் நடக்கும் ஒரு சம்பவத்தால் சத்யா (சமுத்திரக்கனி) என்ற நல்ல மனது படைத்த தாதாவின் அன்புக்கு பாத்திரமாகிறான் அரவிந்த். அரவிந்துக்குத் தெரியாமல் சில பொய்யான சூழ்நிலைகளை உருவாக்கி ஜனனி, அரவிந்தைக் காதலிக்கவைக்கிறான் சத்யா.இது தெரிந்தும் ஜனனியின் காதலை இழக்க விரும்பாமல் உண்மையை அவளிடமிருந்து மறைக்கிறான் அரவிந்த்..

ஜனனிக்கு உண்மைகள் தெரிந்தனவா? அரவிந்த் உண்மையிலேயே சாதிக்கிறானா அல்லது சராசரியாகவே நீடிக்கிறானா?இந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சொல்கிறது மீதிக் கதை.

அனைத்திலும் சரசரியாக விளங்கும் ஒருவன் சாதனையாளனாக உயரும் கதையைத் தன் அறிமுகப் படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் ஞானவேல் முயற்சியும் உழைப்பும் இருந்தால் வாழ்வில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையூட்டும் செய்தியை (மெசேஜ்) சொல்லியிருக்கிறார்.

இந்திய நாட்டில் பலர் ஒரு வேளை உணவின்றி அல்லாடுகையில் தினமும் மிக அதிக அளவில் உணவை வீணடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை எப்படி சரி செய்யலாம் என்பதற்கு ஓரளவு நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வையும் சொல்லியிருப்பதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.

 படம் முழுவதும் ஆபாசம், வன்முறை, எதிர்மறை சிந்தனைகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. வசனங்கள் ஆங்காங்கே கவனம் ஈர்க்கின்றன. முதல் பாதியில் பாலா சரவணனின் இயல்பான நகைச்சுவை, திரைகக்தையை கொஞ்சம் கலகலப்பாக நகர்த்திச் செல்கிறது. இவையெல்லாம் இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்கத் தகுதியான படமாக ஆக்குகின்றன.

ஆனால் இதையெல்லாம் வைத்து ஒட்டுமொத்தப் படத்தையும் ரசிக்க முடியமா என்பது பெரும் கேள்விக்குறி. கதை-திரைக்கதையில் உள்ள குறைகள்  கூட்டத்தில் ஒருத்தன் ஆயிரத்தில் ஒருவனாக மாறுவதைத் தடுக்கின்றன. . 

படத்தில், சராசரியானவனாக வரும் நாயகனுக்கு நடப்பவை எதனுடனும்  ஒன்றவே முடியவில்லை. கண்டதும் காதல், காதலிக்காக ஊடகத் துறைக் கல்வியைத் தேர்ந்தெடுப்பது, அவள் படிக்கும் கல்லூரியிலேயே சராசரி மதிப்பெண்கள் எடுத்த நாயகனுக்கும் இடம் கிடைப்பது, அதன் பின் தாதாவுக்கும் அவனுக்கும் ஏற்படும் நட்பு, அரவிந்த் மீது ஜனனிக்குக் காதல் வருவதற்கான காரணங்கள், அரவிந்த் பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிந்தபின் அவனை அனைவரும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என அனைத்தும் சினிமாவில் மட்டுமே நடக்கக்கூடியவையாக இருக்கின்றன. இறுதியில் அனைவரும் கைவிட்ட நிலையில் தன்னை இந்த உலகுக்கு நிரூபிக்க நாயகன் கையிலெடுக்கும் விஷயம் மட்டுமே மனதைத் தொடுவதாகவும் சரியான தாக்கம் ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

தன்னை சாதனையாளனாக மாற்றிக்கொள்ள நாயகன் ஒரு விஷயத்தைக் கையிலெடுக்கிறான். அதை கடைசி 20 நிமிடங்களில் மட்டும் காட்டுவதை விடுத்து முதல் பாதியிலேயே அதை செய்யத் தொடங்குவதாகக் காண்பித்து அந்தத் துறையில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களையும் அவற்றைக் கடந்து அவன் வெற்றிபெறுவதையும் காண்பிப்பதாகத் திரைகக்தை அமைத்திருந்தால் இந்தப் படம் சராசரி என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கு மனிதர்களுக்கு  நம்பிக்கையூட்டும் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியிருக்கக் கூடும்.

படத்தில் ’சராசரி’ நாயகனின் பாத்திரவார்ப்பு பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. பொய்யான அடையாளத்தைப் பயன்படுத்தி காதலியின் மனதைவென்று பிறகு  தவறுகளுக்காக தண்டிக்கப்பட்டு அதன்பின்  சாதனையாளனாகிறான். அதிலும் அனைத்திலும் சிறந்து விளங்கும் நாயகியின் வார்த்தைகளுக்குப் பங்கு உள்ளது. இது போன்ற தவறுகளை எல்லாம் செய்து திருந்திவிட்டுதான் ஒரு சராசரி ஆள், சாதனையாளனாக மாற முடியுமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. .

அசோக் செல்வன், பாத்திரத்துக்குத் தேவையானதைத் தர மிகவும் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது. குறிப்பாக குடித்துவிட்டு தன் கையறுநிலையைப் புலம்பும் காட்சியில் அந்த பாத்திரத்தின் மீது பரிதாபம்கொள்ளவைக்கிறார். ப்ரியா ஆனந்தை பள்ளி-கல்லூரி மாணவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தத் தோற்றம் சார்ந்த குறையைத் தவிர அவரது நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.

நாயகனின் அப்பாவாக ஜி.மாரிமுத்து பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். ஆனால் அவரைப் போன்ற ’சராசரி’ மகனை வெறுத்து ஒதுக்கும் அப்பாக்கள் 80களோடு வழங்கொழிந்துவிட்டார்கள்.

சமுத்திரக்கனி ’நல்ல’ தாதா வேடத்தில் முந்தைய பல படங்களில் தான் செய்ததை மீண்டும் ஒரு முறை செய்கிறார். ’கெட்ட’ போலீஸாக வரும் ஜான் விஜய் ஓவர் ஆக்ட் செய்து கடுப்பேற்றுகிறார்.

நிவாஸ்.கே.பிரசன்னா இசையில் பாடல்கள் எந்த தாக்கமும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசை பரவாயில்லை என்று சொல்லும்படி அமைந்திருக்கிறது.  பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு வண்ணமயமாக உள்ளது. லியோ ஜான் பாலின் படத்தொகுப்பில் குறைசொல்ல ஒன்றும் இல்லை.

மொத்தத்தில் சராசரி மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் மெசேஜ், மனதைத் தொடும் இறுதிக் காட்சிகள், நல்ல வசனங்கள், பாலா சரவணனின் நகைச்சுவை ஆகியவற்றால் கூட்டத்தில் ஒரு படமாகக் கடந்துவிடாமல் தப்பிக்கிறது’ ‘கூட்டத்தில் ஒருத்தன்’

Rating : 2.5 / 5.0