தனுஷின் நடிப்பால் சிறப்பு அந்தஸ்து பெறுகிறது " குபேரா "
ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, பாக்கியராஜ் மற்றும் ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிருக்கும் படம் " குபேரா ".
மத்திய அரசின் எரிவாயு ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக ஊழல் செய்து மந்திரியின் ஆதரவுடன் தனியார் மயமாக்கி தனதாக்குகிறார் தொழிலதிபர் நீரஜ் ( ஜிம் சார்ப்) . இதற்கு லஞ்சமாக ஒரு லட்சம் கோடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். அதனை எவ்வித சான்றுகளும் இல்லாமல் பிரித்துக் கொடுக்க வேண்டுமாயின் எந்த சொந்த பந்தங்களும் இல்லாத அடையாளமற்ற நபர்கள் தான் தேவை. இதே வேளையில் தவறாக சித்தரிக்கப்பட்ட குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார் வருமானவரித்துறை அதிகாரி தீபக் ( நாகார்ஜுனா). அவரைக் கொண்டு இந்த வேலையை சுலபமாக முடிக்கலாம் என வரவழைக்கிறார்கள். இதற்கு ஒரே வழி கேட்பாரற்ற பிச்சைக்காரர்கள் தான் என முடிவு செய்து நான்கு பிச்சைக்காரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் ஒருவர் தான் தேவா ( தனுஷ் ) . இவர்களைக் கொண்டு லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டதா? இதில் தேவாவின் வேலை என்ன தீபக் என்ன செய்தார் என்பது மீதிக் கதை .
அச்சு அசல் பிச்சைக்காரராகவே மாறியிருக்கிறார் தனுஷ். கள்ளம் கபடமில்லா சிரிப்பு, எதையும் மறைத்து பேச தெரியாத அறியாத முகம், சிறு வயதிலேயே உடைக்கப்பட்ட கை சகிதமாக மனிதர் அத்தனை பேரின் பரிதாப உணர்வையும் அள்ளிக் கொள்கிறார். நிச்சயம் இந்த படத்திற்கு அவருக்கு விருதுகள் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.
" தீபக் சார்! தீபக் சார்!! " என வளைய சுற்றி வருவதும்,
" மேடம் , வாழறதுக்காக பொழைக்கணும் மேடம் " என ராஷ்மிகாவை எரிச்சல் படுத்துவதுமாக " தனுஷ் பல இடங்களில் நடிப்பில் குபேரனாக நிற்கிறார்.
நாகார்ஜுனாவின் நடிப்பும் இவர் நல்லவரா, கெட்டவரா இல்லை எதார்த்தவாதியா என பல குழப்பங்களை உண்டாக்கி நம்மையும் தனுஷ் கேரக்டர் பார்வைக்கு மாற்றிய கதாபாத்திரம். அதை அற்புதமாக கையாண்டிருக்கிறார். ஒரே குறை எப்போதும் நாகார்ஜூனாவுக்கு பின்னணி பேசும் சேகர் ஏன் இந்தப் படத்தில் மிஸ் ஆனார் தெரியவில்லை. ராஷ்மிகா இந்தப் படத்திற்கு அவசியமா எனத் தோன்றியது, ரமேஷ் திலக் , யோகி பாபு , கருணாகரன் போன்றோரே இந்தக் கதாபாத்திரத்தை திசை திருப்பாமல் செய்திருப்பார்களோ எனத் தோன்றியது. ராஷ்மிகா என்பதால்தான் தேவையே இல்லாமல் அவருக்கு ஒரு பின்னணி கதையும் காட்சிகளும் வைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. எனினும் அவருக்கான வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். நீரஜ், சாயாஜி ஷிண்டே, சுனைனா எல்லோரும் தேவையான கதாபாத்திரம் அதற்கான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.
நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் திருப்பதி, மும்பை, என இந்த இரண்டு ஊர்களின் இரண்டு விதமான முகங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் கோடிகளில் கொட்டப்படும் ஏழுமலையான் சன்னதி, கண்ணைக் கவரும் மாளிகைகளும் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களும் இன்னொரு புறம் குவிந்து கிடக்கும் குப்பைமேடுகளும் வாழ வழியின்றி சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களும் என விசுவல் அருமை. எடிட்டர் கார்த்திகா ஸ்ரீனிவாசனுக்கு தான் மிகப்பெரிய சவால் என நினைக்கிறேன். போதுமான அளவு கட் கொடுத்த பிறகும் கூட படம் 3 மணி நேரம் ஐந்து நிமிடங்கள் ஓடுகின்றன. திரும்பத் திரும்ப வரும் சில வசனங்கள், மீண்டும் மீண்டும் தீபக் சார், மேடம் என சுற்றிவரும் தனுஷின் பாத்திரம் இப்படி நீளமான காட்சிகள் பல சலிப்பு ஏற்படுத்துகின்றன. அதனை சரி செய்து இருக்கலாம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையும் பான் இந்தியா திரைப்படம் என்கையில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்த நிலையில் சிறிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. எந்த பாடலும் பெரிய அளவில் ட்ரெண்ட் செட்டராக மாறவில்லை ' போய் வா ' பாடலைத் தவிர. பின்னணி இசை அருமை.
ஒருவேளை இந்த கதை விஜய் ஆண்டனியிடம் கிடைத்திருந்தால் அவருடைய ஸ்டைலில் " பிச்சைக்காரன் 3 " திரைப்படமாக வந்திருக்குமோ எனத் தோன்றியது. அதற்கான அத்தனை அம்சங்களும் திரைக்கதையில் இருந்தது. அதே சமயம் தனுஷ் நாகார்ஜுனா உள்ளிட்ட ஐகான் நடிகர்களால் இந்தியா அடையாளத்தை கிராண்ட் ஆக மாறி இருக்கிறது. ஆனால் தொடர்ந்து நடக்கும் கொலைகள், கேட்பாரற்று பறிக்கப்படும் உயிர்கள், இவ்வளவு பெரிய ஊழல் என எதையும் தேசம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் காவல்துறை கவனத்திற்கு வராமல் இருப்பதும் எங்க பாஸ் லாஜிக் எனக் கேட்க வைக்கிறது. சேகர் கம்முலா இந்த லாஜிக்குகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் அலுவலகம் முன்பு அத்தனை கோடி பணம் கொட்டப்படும் பொழுது எவ்வளவு பெரிய நேஷனல் செய்தியாக இருக்கும். அதை அப்படியே கடந்து சென்று அடுத்த காட்சிக்கு தாவி விடுகிறார்கள். இதையெல்லாம் இன்னமும் சரி செய்து இருக்கலாம்.
மொத்தத்தில் , அரசு நடத்தி வரும் பல தொழில்கள் தனியார் மையம் ஆக்கப்படும்போது அதன் பின்னணியில் எவ்வளவு ஊழல்கள் நடக்கின்றன, எப்படி எல்லாம் பொதுமக்களும், அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள் , பிச்சைக்காரர்கள் தான் ஆனாலும் அவர்கள் இந்த நாட்டு குடிமகன்கள் என்கிற கருத்துகளை முன்வைத்த நிலையில் குபேரா சமூகத்துக்கான படமாக அடையாளம் பெறுகிறது.
Comments