2 வருடம் ஸ்கிரிப்ட்-க்காக கடின உழைப்பு போட்ட கே.வி. ஆனந்த்....! ஓகே சொன்ன சிம்பு...ஆனால்...?

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

இயக்குனர் கேவி. ஆனந்த்-ன் இறப்பு தமிழ் திரையுலகினரை மட்டுமில்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இதேபோல் திரையுலக பிரபலங்களின் தொடர் இறப்பால், தமிழ் சினிமாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த வகையில் நகைச்சுவை நடிகர் விவேக், இயக்குனர் தாமிரா, இயக்குனர் ஜனநாதன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் இறப்பை தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கேவி. ஆனந்த்-ன் இறப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு என்றே சொல்லலாம்.

கேவி. ஆனந்த்- பற்றி...

கடந்த 2005-இல் கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் கேவி. ஆனந்த். இவருக்கு மாஸ் ஹிட் தந்த படம் என்றால், சூர்யாவை வைத்து இயக்கிய அயன் படம்தான். இப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.சினிமா வட்டாரத்தில் சூர்யாவின் மார்க்கெட்டும் அடுத்த லெவலுக்கு சென்றது. பின் முன்னணி இயக்குனராக வலம் வந்த ஆனந்திற்கு அடுத்த சூப்பர் ஹிட் என்றால் கோ படம் தான். நடிகர் ஜீவாவை வேறு பரிமாணமாக காட்டி, நம்பர்- 1 ஹீரோ-வாக கொண்டுசென்றதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

இதைத்தொடர்ந்து மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்ட படங்களாகவே இருந்தன. அதுமட்டுமில்லாமல் இவர் சிவாஜி, செல்லமே, பாய்ஸ், விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இரண்டு வருட கனவு.....

காப்பான் திரைப்படத்திற்கு பின் எந்த படங்களையும் இயக்காமல் இருந்த கே.வி. ஆனந்த், இரண்டு வருடங்களாக ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியுள்ளார். இதுவரை இயக்கிய படங்களை விட இது பெஸ்ட்-ஆக இருக்கவேண்டுமென்று உருவாக்கிய ஸ்கிரிப்ட்-டை பல நடிகர்களிடம் கதை சொல்லி வந்துள்ளார். இறுதியில் நடிகர் சிம்புவிற்கு கதை மிகவும் பிடித்துப்போக, ஓகே சொல்லிவிட்டாராம். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்-ம் படத்திற்கு சரி என்று சொல்ல, இரண்டு வாரங்களில் படத்தின் அறிவிப்புகள் குறித்து வெளியிடலாம்.ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஷூட்டிங் துவங்கலாம் என முடிவு செய்திருந்தார்களாம். எதிர்பாராத விதமாக கே.வி. ஆனந்த் காலமாகிவிட்டதால், அவர் கனவும் மறைந்துவிட்டது.