பிரம்மாண்ட காட்சி அமைப்பு இருப்பினும் மெதுவான கதை சொல்லலால் தடுமாறுகிறார் 'எல் 2 எம்புரான் '
பிருத்விராஜ் இயக்கத்தில் லாலெட்டன் மோகன்லால் நடித்துள்ள படம் ' எல் 2 எம்புரான் '. 2019 ஆம் ஆண்டு வெளியான ' லூசிஃபர் ' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. உடன் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், அபிமன்யூ சிங், சுராஜ் வெஞ்சரமுடு,உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது இந்த 2ஆம் பாகம் .
'முதல் பாகத்தில் கேரள முதல்வர் பி.கே.ஆர் ( சச்சின் கடெக்கர்) மரணம் . அடுத்து அவர் பதவிக்கு யார் என்னும் கேள்விகளுடன் போட்டிகள் உருவாக ஆட்சி, அதிகாரம் என இரண்டையும் கைப்பற்ற நினைக்கிறார் பி.கே.ஆர் மருமகன் பாபி ( விவேக் ஓபராய்). இதனை முறியடித்து அவரின் மகன் ஜத்தினிடம் ( டொவினோ தாமஸ்) பொறுப்புகளை ஒப்படைத்து தலைமறைவாகி விடுகிறார் ஸ்டீபன் நெடும்பள்ளி. யார் இந்த ஸ்டீபன் அவரின் பின்னணி என்ன என்பதற்கு ஆபிராம் குரேஷி என்னும் உலகையே ஆட்டிப் படைக்கும் கேங்ஸ்டர் என அடுத்த பாகமாக இரண்டாம் பாகம் தொடர்கிறது.
நம்பி ஆட்சியில் உட்கார வைத்த ஜத்தின் இரண்டாம் பாகத்தில் மத்தியில் மதவாத அரசியல் நடத்தும் பால்ராஜ் பஜ்ரங் ( அபிமன்யூ சிங்) உடன் இணைந்து அரியணை ஏறிய இளவரசன் போல அதிகாரம் , ஊழல் என திளைக்கிறார். ஜத்தினுக்கு எதிராக களமிறங்குகிறார் பி. கே. ஆர் மகள் பிரியதர்ஷினி ( மஞ்சு வாரியர்) . அவருக்கு பக்கபலமாக களம் இறங்கி லாலேட்டன் ஆடும் ஆட்டம் தான் மீதி கதை.
மோகன் லால் ... பெயரைச் சொன்னாலே சும்மா அதிரும் என்பதற்கு ஏற்ப தெறிக்க விடுகிறார் . தமிழ் டப்பிங்கில் வசனங்களும் அருமை. அவர் வரும் காட்சிகள் எல்லாமே ஸ்லோ மோஷன், மாஸ் பிஜிஎம் என திரை தீப்பிடிக்கிறது. எப்போதுமான டெம்ப்லேட் வில்லன் கேரக்டராக மாறி இருக்க வேண்டிய டொவினோ தாமஸ் கதாபாத்திரம், அவருடைய உடல் மொழியால் தனித்துத் தெரிகிறது. மஞ்சு வாரியர் முதல் பாகத்தில் இருந்த அளவிற்கு இந்த படத்தில் அவருக்கு வேலை இல்லை என்றாலும் அரசியல் அதிகாரம் என எழுச்சி கொடுக்கும் பொழுது அருமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆனால் இன்னும் சற்று பவர்ஃபுல்லான கதாபாத்திரமாக அவர் நடித்திருக்கலாம்.
முந்தைய பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் சில வினாடிகள் வந்த பிரித்விராஜ் இந்த படத்தில் கதை முழுக்க மிகப்பெரிய கதாபாத்திரமாகவே வருகிறார். எனினும் அபிமன்யுசிங் துவக்கத்தில் மிரட்டினாலும் போகப் போக அவரது கதாபாத்திரத்தில் கனம் இல்லை. அடுத்து சுராஜ் வெஞ்சரமுடு போன்ற மிகப்பெரும் ஆளுமைகளை செட் புராப்பர்ட்டி போல் பயன்படுத்தியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
முரளி கோபியின் கதையில் பிருத்திவிராஜ் இயக்கமும் மற்றும் திரைக்கதையும் இணைந்து காட்சிகளை மேலும் பிரம்மாண்டமாக்கி இருக்கிறது. ஆப்பிரிக்கா , ஐரோப்பா, ஆப்கானிஸ்தான் என எங்கும் பயணிக்கும் கதைக்களம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.
அதற்குப் பக்க பலமாக ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் விஷ்வல்கள் நம்மை மயக்குகின்றன. படம் மேக்கிங் ஆகவே ரிச் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. எடிட்டர் அகிலேஷ் மோகன் தான் இன்னும் சற்று இறங்கி வேலை செய்திருக்கலாம். மோகன்லால் வரும் காட்சியில் ஸ்லோ மோஷன்கள் சரி ஆனால் அவரை காண்பித்தாலே ஸ்லோ மோஷன் என்பதுதான் சலிப்பாக இருக்கிறது. அதையெல்லாம் சற்று 2x வேகத்தில் ஓட்டியிருக்கலாம்.
தீபக் தேவ் இசையில் எம்பிரானை பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் காட்சிகளின் பிரம்மாண்டத்திற்கு வலிமை சேர்த்து இருக்கிறது.
படத்தின் கதை பொருத்தவரை சரியாக நினைத்து முதல் பாகத்தில் கோர்த்து இருந்தாலும். நீளமான காட்சிகள் மற்றும் நீளமான வசனங்கள், தேவையற்ற ஸ்லோ மோஷன்கள் என மூன்று மணிநேர படம் இதற்கு அவசியமா என்கிற கேள்வியை உருவாக்குகிறது. அனேகமாக வரும் நாட்களில் நீளத்தை குறைக்க வேண்டி சில காட்சிகளை வெட்டி தூக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
மொத்தத்தில் 'எல் 2 எம்புரான்' முதல் பாகத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் கதைக்களத்தையும் இணைத்து வருவோருக்கு ஏமாற்றம் உருவாக்கலாம். ஒரு சிலர் சற்று ஃபார்வர்ட் மோடில் வைத்து படத்தை பார்க்க முயற்சி செய்தால் ஓரளவிற்கு ஓகே சொல்ல வைப்பார் லாலேட்டன்.
Comments