இரண்டையும் கண்டிக்கின்றேன்: கமலின் இந்து தீவிரவாதம் குறித்து பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Thursday,May 16 2019]

கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் குறித்த கருத்து கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் ஊடகங்களில் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் விவாத பொருளாகியுள்ளது. அவர் மீது வழக்குகள், தேர்தல் ஆணையத்தில் புகார்கள் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது சர்ச்சைக்கருத்து குறித்து பலர் கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் தற்போது நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கமலின் கருத்து தேவையில்லாத ஒன்று. அதேபோல் அவர் பேசிய இரண்டு வரிகளை மட்டும் எடுத்து கொண்டு அதனை பெரிதுப்படுத்தி தலைவர்கள் பெரிய பிரச்சனை ஆக்குவதும் தவறு. நான் இரண்டையும் கண்டிக்கின்றேன். மக்கள் இந்த விஷயத்தில் அதிக உணர்ச்சிவசப்பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

கைதட்டல் பெறுவதற்காக சர்ச்சையான விஷயங்களை தலைவர்கள் பேசக்கூடாது. மேலும் பிரிவினையை உண்டாக்கும் கருத்துக்களை தடை செய்ய சரியான விதிமுறைகள் வேண்டும். கமல்ஹாசன் தான் பேசியது வரலாற்று உண்மை என்கிறார். ஒரு தீவிரவாதியின் மதத்தை அவர் ஆராயவேண்டிய அவசியம் ஏன்? அவர் தனது கருத்தை நியாயப்படுத்த மீண்டும் மீண்டும் தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசுகிறார் என்று கூறியுள்ளார்.