Download App

Lakshmi Review

லஷ்மி: வெள்ளித்திரையில் ஒரு டான்ஸ் ஷோ

ஐஸ்வர்யா ராஜேஷின் மகள் லக்ஷ்மிக்கு படிப்பை விட டான்ஸில் தான் ஆர்வம் அதிகம். ஆனால் தனிப்பட்ட முறையில் டான்ஸ் தனது வாழ்க்கையை பாதித்ததால் ஐஸ்வர்யாவுக்கு டான்ஸ் என்றாலே வெறுப்பு. அதனால் அம்மாவுக்கு தெரியாமல் தற்செயலாக அறிமுகமான பிரபுதேவாவின் உதவியால் டான்ஸ் பள்ளியில் சேருகிறார் சிறுமி லஷ்மி. மும்பையில் நடைபெறும் 'Pride of India' டான்ஸ் போட்டியில் சென்னை அணியிலும் லக்ஷ்மிக்கு இடம் கிடைக்கின்றது. அம்மாவுக்கு தெரியாமல் மும்பை செல்லும் லக்ஷ்மி இந்த போட்டியில் வெற்றி பெற்றாரா? லக்ஷ்மிக்கு உதவி செய்யும் பிரபுதேவா யார்? ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் டான்ஸ் என்றால் வெறுக்கின்றார் போன்ற கேள்விகளுக்கு கிடைக்கும் விடைதான் இந்த படத்தின் மீதிக்கதை

டைட்டில் கேரக்டரில் நடித்திருக்கும் சிறுமி தித்யா தான் படத்தின் உயிர். டான்ஸ் தனது உடல், பொருள், ஆவி என அனைத்திலும் உள்ளது என்பதை தனது நடனத்தின் மூலமும் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். டான்ஸ் பள்ளியில் சேர பிரபுதேவாவை ஏமாற்றும் விதம், தன்னை சுற்றி சுற்றி வரும் இரண்டு சிறுவர்களை சமாளிக்கும் விதம், வெறித்தனமான டான்ஸ், கிளைமாக்ஸில் இறுதிச்சுற்று வரை வந்தபின் ஏற்படும் ஒரு திருப்பத்தால் ஏற்படும் சோகம் என படம் முழுவதும் இந்த கேரக்டர்தான் ஆக்கிரமித்துள்ளது.

சாதாரணமான கமர்ஷியல் படங்களிலேயே டான்ஸில் பின்னி பிடலெடுக்கும் பிரபுதேவா, முழுக்க முழுக்க ஒரு டான்ஸ் படம் என்றால் விட்டுவைப்பாரா? ஒரே ஷாட்டில் நீளமான டான்ஸ் உள்பட பல காட்சிகளில் இதுவரை இல்லாத ஸ்டெப்ஸ்களில் ஆடி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஆர்ப்பாட்டமின்றி அமைதியான, ஒருசில காட்சிகளில் செண்டிமெண்ட் என முதன்முதலில் இந்த படத்தில்தான் பிரபுதேவா அடக்கி வாசித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறிய கேரக்டர்தான் என்றாலும் சரியாக செய்துள்ளார். இவரது பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லை என்றாலும் இந்த படத்தின் மெயின் கதைக்கு அது தேவையில்லை என்பதால் இயக்குனர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தெரிகிறது.

கருணாகரன், கோவை சரளா இருவரும் காமெடி செய்வதாக அவர்களாகவே நினைத்து கொள்கின்றனர். தியேட்டரில் யாரும் சிரிக்கவில்லை. 

ஒரு டான்ஸ் படத்திற்கு தேவையான இசையை சரியாக வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசையும் அருமை. நீரவ் ஷாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரியா பலம்.

இயக்குனர் விஜய் படம் என்றாலே இந்த படத்தை எந்த படத்தில் இருந்து சுட்டிருப்பார் என்றுதான் பொதுவாக நெட்டிசன்களில் முதல் கேள்வியாக இருக்கும். பெரும்பாலும் அவர் எந்த படத்தில் இருந்து எடுத்தார் என்பதை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் இந்த படம் 'கராத்தே கிட்' படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதை அனைவரும் கண்டுபிடித்துவிடுவார்கள். ஒரு சிறுமியின் டான்ஸ் கனவு என்ற கோணத்தில் மட்டும் திரைக்கதையை கொண்டு சென்றிருந்தால் இந்த படம் நிச்சயம் அனைவரும் விரும்பத்தக்க ஒரு படமாக இருந்திருக்கும். பிரபுதேவாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஏற்கனவே அறிமுகம், அதனால் அவர் டான்ஸை வெறுப்பது, கிளைமாக்ஸில் ஏற்படும் விபத்து, சென்னை அணியை ஜெயிக்க விடாமல் செய்யும் சதி ஆகிய காட்சிகள் அனைத்தும் நம்பும்படி இல்லாதது மட்டுமின்றி திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.

மேலும் டான்ஸ் போட்டி ஆரம்பம் ஆனது முதல் முடியும் வரை படமாக்கப்பட்ட விதம் ஓகே என்றாலும் 'மானாட மயிலாட, 'டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற தொலைக்காட்சி டான்ஸ் ஷோக்களை மீண்டும் ஒருமுறை பார்த்தது போல் உள்ளது. போட்டியில் ஒரு விறுவிறுப்போ, சுவாரஸ்யமோ இல்லை. 

மொத்தத்தில் சிறுமி தித்யாவின் அருமையான டான்ஸ், பிரபுதேவாவின் நடிப்பு ஆகியவற்றுக்காக டான்ஸ் பிரியர்கள் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்

 

Rating : 2.5 / 5.0