Download App

Lens Review

இயக்குனர் வெற்றிமாறன் வாங்கி வெளியிடுகிறார் என்பதே ‘லென்ஸ்’ படத்துக்கு இருக்கும் ஒரே நட்சத்திர மதிப்பு. அறிமுக இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்து எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள் அல்லது அவ்வளவு பிரபலமாகாதவர்கள். இவர்காளை வைத்துக்கொண்டு ஒரு வயதுவந்தோருக்கான கதையை அதற்குத் தேவையான கவனத்துடனும் முதிர்ச்சியுடனும் கையாண்டிருக்கிறார் இயக்குனர். படம் எப்படி இருக்கிறது என்று விரிவாக விமர்சனத்தில் பார்ப்போம்.

சென்னையில் உயர் நடுத்தர வர்க்க அபார்ட்பெண்ட் வாசியான அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) தனது மனைவியை (மியா கோஷல்) கண்டுகொள்ளாமல் இணையத்தில் பெண்களுடன் பாலியல்ர் ரீதியான பகிர்வுகளில் (செக்ஸ் சாட்டிங்) ஈடுபடுகிறான். ஒரு நாள் மனைவி இல்லாத  நேரத்தில் அரவிந்தனுக்கு ஒரு பெண்ணிடமிருந்து வீடியோ சாட்டிங்குக்கு அழைப்பு வருகிறது. ஆனால் வீடியோவைத் திறந்து பார்த்ததும் அழைப்பு விடுத்தது ஒரு ஆண் (ஆனந்த் சாமி) என்று தெரியவர இணைப்பைத் துண்டிக்க முயல்கிறான்.

அப்போது எதிர்முனையில் இருக்கும் யோஹன், தான் தற்கொலை செய்துகொள்வதை அரவிந்த் பார்க்க வேண்டும் என்று கெஞ்சுகிறான். அரவிந்த் முடியாது என்று சொல்ல, முந்தைய நாள் அவர் பெண்ணுடன் செக்ஸ் சாட்டிங்கில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்திருப்பதைக் காட்டி அதை இணையத்தில் ஏற்றிவிடுவேன் என்று மிரட்டுகிறான். அதோடு அரவிந்தின் மனைவியையும் கடத்திவைத்திருக்கிறான். தனது மானத்தையும் தனது மனைவியின் உயிரையும் காப்பாற்ற வேறு வழியில்லாமல் சாட்டிங்கைத் தொடர்கிறான் அரவிந்த்.

யோகன் யார்? அரவிந்தை அவன் ஏன் இப்படி ஒரு விசித்திரமான சூழ்நிலையில் சிக்க வைக்கிறான்? இந்த சாட்டிங்கில் முடிவில் அரவிந்துக்கும் யோகனுக்கும் நடப்பவை என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறது மீதித் திரைக்கதை.

பாலியல் நிகழ்வுகளைப் பார்த்து ரசிக்கும் இச்சையை voyeurism என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இது பல்வேறு வகைகளில் இணையத்தில் கிடைக்கிறது. அவற்றில் ஒன்றுதான் பாலியல் நிகழ்வுகளை அவற்றில் ஈடுபடுபவர்களுக்குத் தெரியாமல் படம்பிடித்து இணையத்தில் பரவவிடுவது. ஒருவரின் வாழ்க்கையையே சிதைக்கவல்ல இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பவர்களும் இணையத்தில் ஏற்றுபவர்களும் ஏன் படம்பிடிப்பவர்களும்கூட இந்த சமூகத்தில் சாதாரண மனிதர்களாக நம்மிடையேதான் இருக்கிறார்கள் என்பதைப் பொட்டில் அறைந்தார்போல் சொல்கிறது ‘லென்ஸ்’.

வயது வந்தவர்களுக்கான அதுவும் பாலியல் தொடர்பான இப்படிப்பட்ட ஒரு படத்தை மிக துணிச்சலாகவும் அதே சமயத்தில் முதிர்ச்சியான அணுகுமுறையுடனும் கையாண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதார கிருஷ்ணன். படத்தில் வரும் பாலியல் சித்தரிப்புகள் அனைத்தும் கதைக்குத் தேவையானதாக இருக்கின்றனவே அன்றி அவை ரசிகர்களின் இச்சையைத் தூண்டும் நோக்கில் பயன்படுத்தப்படவில்லை. அதோடு படத்தில் தேவையில்லாத கமர்ஷியல் சமாச்சாரங்கள் எதையும் சேர்க்காமல் இருந்ததிலும் இயக்குனரின் துணிச்சல் வெளிப்படுகிறது.

முதல் பாதியின் பெரும்பகுதி இரு கதாபாத்திரங்களுக்கிடையிலான நீண்ட உரையாடலே ஆக்கிரமித்துக்கொள்வது வழக்கமான கமர்ஷியல் படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் முடிவில் இதுதான் நடக்கும் என்று முன்னமே ஊகித்துவிட முடிவதால் அவை அளவுக்கதிகமாக நீட்டிக்கப்படிருப்பதுபோன்ற் உணர்வு ஏற்படுகிறது.

மையப் பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் ராதாரகிருஷ்ணன், ஆனந்த் சாமி இருவரும் தங்கள் பாத்திரத்துக்கான நடிப்பைக் குறையின்றித் தந்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் அனுபவம் மிக்க நடிகர்கள் இதே பாத்திரங்களை ஏற்றிருந்தால் இன்னும் சிறப்பான தாக்கம் இருந்திருக்கும் என்பதைச் சொல்லியாக வேண்டும் .

ஊமைப் பெண்ணாக வரும் அறிமுக நடிகை அஷ்வதி லால் சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்.  குறிப்பாக அவரது கடைசிக் காட்சியில் அவரது எமோஷனல் நடிப்பும் அந்தக் காட்சி வடிவமைக்கப்பட்ட விதமும் மனதைத் தொடும் வகையில் உள்ளன.

மியா கோஷல், அம்பேத் மற்றும் இதர துணை நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்தின் மிகப் பெரிய பலம். ’மூங்கில் நிலா’ பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. எஸ்.ஆர்.கதிரி ஒளிப்பதிவு இயற்கையான ஒளி, வித்தியாசமான கோணங்கள் மற்றும் ஷாட் தேர்வுகள் கதை நகர்வுக்கு சிறப்பாகப் பங்களித்துள்ளது.

சில குறைகள் இருந்தாலும் இன்றைய இணைய உலகத்தில் சமூகத்தில் நிகழும் ஒரு முக்கியமான பிரச்சனையை அதன் கோர விளைவுகளை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்திருக்கும் ‘லென்ஸ்’ படக்குழுவினரை மனதாரப் பாராட்டலாம்.  இதுபோன்ற துணிச்சலான படத்தை தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையின் தரத்தை நம்பி வெளியிட்டிருக்கும் வெற்றிமாறனும் பாராட்டுக்குரியவர்.

Rating : 3.3 / 5.0