Download App

Leo Review

’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா?

இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் ’லியோ’ அளவிற்கு வேறு எந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே. ’லியோ’ ரிலீஸ் ஆவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.  

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த்,  அஜித், ஆகியோர்  தங்கள் வயதுக்கு ஏற்ற கேரக்டரை ஏற்று நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜய்யும் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக, நடுத்தர வயது நபராக இந்த படத்தில் நடித்துள்ளார்.  

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தியோக் என்ற இடத்தில் காபி ஷாப் நடத்தி வரும் விஜய்க்கு அழகான மனைவி, மகன், மகள் என அன்பான குடும்பம், அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்பாராத வகையில் மிஷ்கின் குழுவினர் விஜய்யின் காபி ஷாப்புக்கு வந்து பிரச்சனை செய்ய, அதனால் விஜய்,  மிஷ்கின் உள்பட ஐந்து பேரையும் கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனை அடுத்து நீதிமன்றத்தில்  அவர் தற்காப்புக்காக தான் கொலை செய்தார் என்று விடுதலை செய்யப்படுகிறார். அத்துடன் பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால் இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகும் போது, விஜய்யின் புகைப்படத்தை பார்க்கும் சஞ்சய் தத் குழுவினர் ஒட்டுமொத்தமாக விஜய்யின் வீட்டிற்கு வந்து இறங்கி விஜய்யையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டுகின்றனர்.

விஜய்யை எதற்காக சஞ்சய்தத் கும்பல் மிரட்டுகின்றனர்? விஜய்யின் பழைய வாழ்க்கைக்கும் சஞ்சய்தத்துக்கு என்ன தொடர்பு? விஜய்யும் அவரது குடும்பமும் என்ன ஆனது, விஜய்யின் பின்னணி என்ன? லியோ யார்? என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.

தளபதி விஜய் நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் மெருகேறி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ’லியோ’ திரைப்படத்தில் அவரது நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகள் கொஞ்சம் அதிகம் தான். ஆரம்ப காட்சியில் தனது மனைவி மகன் மகள் என தனது குடும்பத்தின் மீது அன்பை காண்பிப்பது, அதன் பிறகு காபி ஷாப்பில் தனது மகளுக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் ஆவேசம் அடைவது,  தன்னை லியோ என்று நினைத்து மிரட்டும் சஞ்சய்தத் குழுவினர்களிடம் தான் லியோ இல்லை என்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்வது, தன்னை சந்தேகப்படும் த்ரிஷாவிடம் ‘நீயே என்னை சந்தேகப்பட்டால் எப்படி’ என்று உணர்ச்சிகரமாக அழுது கொண்டே அப்பாவியாக கேட்பது என இந்த படத்தின் மொத்த கதையையும் தன் தோள் மேல் விஜய் தாங்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை.

வழக்கம் போல் ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டும் விஜய், ’நா ரெடி’ என்ற பாடலில் தனது துள்ளலான நடனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். மொத்தத்தில் தன்னிடம் எதிர்பார்த்து வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் முழு அளவில் திருப்தி செய்து ஒரு புல் மீல்ஸ் அளித்து அனுப்பியுள்ளார். பஞ்ச் டயலாக் இல்லாமல், பாடி லாங்குவேஜ் இல்லாமல் இருப்பதில் திருப்தி

த்ரிஷா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தயக்கம் இன்றி நடித்துள்ளார். மற்ற விஜய் படங்களில் வரும் ஹீரோயின் போல் பாடல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டும் இல்லாமல் கதையுடன் அவரது கேரக்டர் ஒன்றி இருக்கிறது. குறிப்பாக விஜய்யிடம் தான் ஏன் சந்தேகப்பட்டேன் என்பதை அவர் விளக்கும் இடம் மிகவும் அருமை. ஒரு கட்டத்தில் ’என்னை நீ இன்னொருவன் என்று நினைத்துக் கொண்டுதான் இன்னும் இருக்கிறாயா என்று கேட்கும் போது திடீரென விஜய்க்கு லிப்கிஸ் கொடுப்பது யாரும் எதிர்பாராதது.  
விஜய், த்ரிஷாவை அடுத்து ஸ்கோர் செய்வது சஞ்சய்தத் மற்றும் அர்ஜுன். இருவருக்குமே கிட்டத்தட்ட சம அளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத்தின் மிரட்டலான நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கு புதிது. குறிப்பாக த்ரிஷாவையும் அவரது மகளையும் காப்பாற்றிவிட்டு த்ரிஷாவிடம் மிரட்டலுடன் பேசும் வசனம் ஒரு அனுபவமுள்ள நடிகர் என்பதை உறுதி செய்துள்ளது.

ஆக்சன் கிங் அர்ஜுன்  அதிரடி காட்சிகள் படத்தின் படத்திற்கு பிளஸ் பாயிண்ட். விஜய்க்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். விஜய்க்கும் அர்ஜூனுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை மாஸ் ஆக்சன்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜூன் ஆகிய நால்வரை தவிர இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றவர்களை சரியாக பயன்படுத்தினாரா என்பது கேள்விக்குறியே.  குறிப்பாக கௌதம் மேனன் மற்றும்  பிரியா ஆனந்த் கேரக்டர்களுக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை. மன்சூர் அலிகான் இடம் லியோவின் பின்னணியை கேட்கும் ஒரு காட்சியில் மட்டும் கௌதம் மேனனின் நடிப்பு ஓகே. மற்றபடி அவர் எதற்காக இந்த படத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அதேபோல் பிரியா ஆனந்தையும்  வேஸ்ட் செய்கிறார்கள். பிக்பாஸ் மாயா ஒரே ஒரு காட்சியில் வந்து ’விக்ரம்’ படத்தின்  பின்னணி இசையை ஞாபகப்படுத்தி செல்கிறார்.

ரிலீசுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் ’இந்த படத்தின் முதல் பத்து நிமிடங்களை தவறாமல் பாருங்கள், ஆயிரக்கணக்கானோர் அதற்காக உழைத்து உள்ளோம் என்று கூறினார். ஆனால் முதல் 10 நிமிடம் மட்டுமில்லை, முதல் அரை மணி நேரத்தை மிஸ் செய்துவிட்டு இந்த படத்தை பார்த்தால் கூட படத்தின் கதை புரிந்து விடும். ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எப்படி  கல்லூரி காட்சி முழுவதுமே படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தமில்லாமல் இருந்ததோ அதே போல் தான் இந்த படத்திலும் ஹைனா காட்சி மற்றும் மிஷ்கின் குழுவின் காட்சி படத்தின் மெயின் கதைக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் இருந்தது.  

மேலும் LCU படம் என்பதை காண்பிக்க சில காட்சிகளை, கேரக்டர்களை வலிய திணித்தது போல் உள்ளது. விக்ரம் படத்தில் LCU என்பது இயல்பாக அமைந்திருக்கும், ஆனால் இதில் LCU செயற்கையாக அவர் நுழைத்துள்ளதாகவும் தெரிகிறது.  

தனது முந்தைய படங்களில் சண்டைகாட்சிகளின் பின்னணியில் பழைய பாடல்களை பயன்படுத்தியதை போல் இதிலும் பயன்படுத்தி உள்ளார். குறிப்பாக ’தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணைக்கும் சண்டையே வந்ததில்லை’ என்ற பாடலின் பின்னணி மிக சரியாக பொருத்தமாக இருக்கிறது. மேலும் குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று சொல்ல முடியாத வகையில் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக இரண்டாம் பாதி உள்ளது.

விஜய்யை அடுத்து இந்த படத்தை முழு அளவில் தாங்கி பிடித்து இருக்கிறார் என்றால் அது  அனிருத் தான். பின்னணி இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நா ரெடிதான் பாடல் மற்றும்  அன்பெனும் என்ற இரண்டு பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது.

மேலும்  ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் சகோதரர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாம் பாதியில் செம வேலை கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை காட்சி பிரமிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

மொத்தத்தில் லோகேஷின் முந்தைய படமான ’விக்ரம்’ படம் போல் இல்லை என்றாலும் விஜய் ரசிகர்களை முழுக்க முழுக்க திருப்திப்படுத்தும் அளவுக்கு படம் எடுத்து உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

‘லியோ’ விஜய் ரசிகர்களை மட்டும் திருப்தி செய்துள்ளது.
 

Rating : 2.8 / 5.0