உணர்வுகளால் நம்மைக் கட்டிப் போடுகிறார்கள் "லிலோ அண்ட் ஸ்டிட்ச்"
2002ஆம் ஆண்டு அனிமேஷன் வடிவில் வெளியான திரைப்படம் தான் "லிலோ அண்ட் ஸ்டிட்ச்". லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக தற்போது அதே பெயரில் வெளியாகி இருக்கிறது. கிரிஸ் சாண்டர்ஸ் மற்றும் டீன் டெப்ளாயிஸ் இணைந்து எழுதிய கதையை இயக்கியிருக்கிறார் டீன் பிளஸ்சர் கேம்ப். வால்ட் டிஸ்னி புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
நிறைய சேட்டைகள் செய்யும் குறும்புக்கார ஹவாய்ச் சிறுமி லிலோ . அப்பா, அம்மா இல்லாத லிலோ ( டேவ் சேஸ்) , அக்கா நானியின் ( டியா கர்ரே) வளர்ப்பில் வளர்கிறாள். அதீத குறும்புத்தனம் காரணமாகவே லிலோவிற்கு நண்பர்கள் கிடையாது. பலரும் லிலோவை ஒதுக்குகிறார்கள். தனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் வேண்டும் என வால்நட்சத்திரத்தை பார்த்து வேண்டுகிறாள் லிலோ. அதே சமயம் இன்னொரு வேற்று கிரகத்தில் உருவாக்கப்பட்ட சிறிய பிராணி ஒன்று பூமிக்கு வந்து சேர்கிறது. அதனை தேடிக் கொண்டு பிடித்துச் செல்ல இரண்டு வேற்றுக்கிரகவாசிகளும் உடன் பின் தொடர்ந்து வருகிறார்கள். பூமிக்கு வந்து சேரும் அந்த சிறிய பிராணி தன்னை ஒரு குட்டி நாய் போல் காண்பித்து லிலோ வீட்டிற்கு வந்துவிடுகிறது. லிலோவும் அதற்கு ஸ்டிட்ச் ( கிரிஸ் சாண்டர்ஸ் (குரல்)) எனப் பெயரிட்டு செல்லப் பிராணியாக வளர்க்கிறாள். கிடைத்த வேலையை செய்து கொண்டு தானும் தன் தங்கையும் வாழ்ந்து வரும் நிலையில் தங்கையின் குறும்புத்தனத்தாலேயே பல பிரச்சனைகளை சந்திக்கும் அக்கா நானிக்கு ஸ்டிட்ச் வருகை மேலும் தலைவலியாக மாறுகிறது. போதாக்குறைக்கு அரசின் கண்காணிப்பு வேறு. அக்காவின் வளர்ப்பில் லிலோவுக்கு பாதுகாப்பு இல்லை என முடிவு செய்து காப்பகத்திற்கு அனுப்பவும் முடிவு செய்கிறது அரசாங்கம். லிலோ - நானி நிலை என்ன ஆனது, புதிதாக பூமிக்கு வந்த ஸ்டிட்ச் எதிர்காலம் என்ன என்பது மீதிக் கதை.
படத்திற்கு மிகப்பெரிய பலம் ஸ்டிட்ச் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட கிராபிக்ஸ் டிசைனிங் தான். அதன் குறும்புகளும் சேட்டைகளும், உணர்வுக்கு குவியல்களும் ஒன்று சேர்ந்து படத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கும்படி உருவாக்கி இருக்கிறார்கள். லிலோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுமி டேவ் சேஸ் குட்டி ஸ்டார் தான். அப்படி ஒரு நடிப்பு, குறும்பு, ஹவாய் நடனம் என அசத்தல் சுட்டி. உடன் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டியா கார்ரே உணர்வால் நம்மை ஆட்கொள்ள காமெடிக்கு ஸாக் கலிஃபியானகிஸ் மற்றும் பில்லி மேக்னஸ்சென் உதவியிருக்கிறார்கள்.
ஆலனின் இசை உணர்வு, அன்பு, அழுகை, தவிப்பு என அனைத்தையும் கடத்துகிறது. நைஜெல் பிளக் ஒளிப்பதிவில் 3டி விருந்தாக நம்மை ஹவாய் தீவுகளுக்குக் கூட்டிச் செல்கிறது. ஆடம் ஜெர்ஸ்டெல் மற்றும் பிலிப் ஜே. பார்டெல் எடிட்டிங் கில் படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை.
மொத்தத்தில் , கோடை விடுமுறைக்கு ஏற்ற கொண்டாட்டமான குடும்பத் திரைப்படமாக குழந்தைகளையும் சேர்த்து மகிழ்விக்கும் இந்த " லிலோ அண்ட் ஸ்டிட்ச் " .
Rating: 3.5 / 5.0
Showcase your talent to millions!!
മലയാളം Movie Reviews






Comments