ஊரடங்கு மட்டுமே கொரோனாவிற்கு தீர்வாகாது: மருத்துவ வல்லுநர் குழு பேட்டி

  • IndiaGlitz, [Monday,June 29 2020]

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் சென்னை உள்பட தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பதற்கான ஆலோசனை இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டனர்

இந்த ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க மேலும் பரிந்துரைக்கவில்லை என்றும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வாகாது என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்

மேலும் தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு லேசான கொரோனா அறிகுறி மட்டும் இருப்பதால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்

சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் குறைந்துள்ளது என்றும், நோய் கண்டறிதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே இதற்கு காரணம் என்று மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர். மேலும் பொது போக்குவரத்தில் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் மருத்துவகுழுவினர் கூறியுள்ளனர்

மேலும் கொரோனா அதிகரித்து வரும் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ குழுவினர் கூறினார்கள்

மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின்படி, சென்னை உள்பட தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது. இருப்பினும் தமிழக முதல்வரின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் மத்திய அரசின் அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்