பேரன்பின் ஆதி ஊற்று : நா.முத்துக்குமார்

  • IndiaGlitz, [Monday,August 14 2017]

ஒரு பாடலாசியர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி 2016 ல் இறந்துவிடுகிறார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி 2017 வரை கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவர் பாடல்கள் எழுதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. எய்தவன், நிசப்தம், யாக்கை, கடவுள் இருக்கான் குமாரு இறுதியாகத் தரமணி என அவர் இறந்த பிறகு அவர் பாடல்கள் கொண்டு வெளியான படங்கள் மட்டும் கிட்டத்தட்ட 10க்கும் மேல்! இறந்தும் ஒரு வருடமாக வேலைபார்த்த அந்தப் பாடலாசியர் யார் தெரியுமா?
நா.முத்துக்குமார்!

கண்ணதாசன் என்ற தமிழ்த்தாயின் மகனுக்குப் பிறகு வைரமுத்து, வாலி இருவரும் தமிழின் திரையிசையை ஆட்டிப் படைக்கும் வல்லமையுடன் உலா வந்தனர். இருவரும் தங்களுக்கென்று தனி பாணியே வைத்திருந்தனர். வைரமுத்து புதுக்கவிதை, உவமையாலும், வாலி எதுகை மோனை என பாடல்கள் எழுதி வந்தனர். ஆனால் அதன்பின் நா.முத்துக்குமார் கண்ணதாசன் போன்றவர். நா.முத்துக்குமாரின் வரிகள் எப்பொழுதும் எளிமையின் வலிமை சொல்பவை. தன் பாடல்களுக்கென மூளையைப் பிசையும் தமிழ் வார்த்தைகள், சொற்கள் என உபயோகிக்காமல் எளிமையான தமிழில் தன் வீரியத்தை உணர வைப்பார்.

'நிலம், நீர், காற்றிலே
மின்சாரங்கள் பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தைக் கடந்திடும்!'

கவிதையில் ஒரு trick உண்டு. ஒரு சிறிய பொய்யைச் சொல்லிப் பக்கத்தில் இன்னொரு பெரிய பொய்யைச் சொன்னால், அந்தச் சிறிய பொய்யை நாம் உண்மையாகவே பாவித்துவிடுவோம். இதில் பூடகமாக காதல் மின்சாரம் தரும் என்பதை நம்ப வைத்துவிடுகிறார். அதன் பிறகு அது பிரபஞ்சத்தையே கடக்கும் என வியக்க வைக்கிறார்.

பாலுமகேந்திரா விடம் உதவியாளராக இருந்த நா.முத்துக்குமார் சீமான் மூலம் 2000 ஆம் வருடத்தில் பாடலாசிரியர் ஆகிறார் 'வீரநடை' படத்தின் மூலம். அதன்பிறகு தேவா, கார்த்திக் ராஜா என பாடல்கள் நிறைய எழுதுகிறார். பாலு மகேந்திரா 'ஜூலி கணபதியில் பாடல்கள் எழுத வைக்கிறார். பாடல்களைப் பார்த்த இளையராஜா சிலாகித்துப் போகிறார்.

மழையை ரசித்துக்கொண்டு தன் காதலை நினைத்துப் பாடும் பாடலாக வரும் 'ஜூலி கணபதி' யின் 'எனக்குப் பிடித்த பாடல்' நா.முத்துக்குமாரின் மிகப்பெரிய லேண்ட்மார்க்.
'நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம், நீ தொட்ட இடம் எல்லாம் வீணையின் தேன்ஸ்வரம்' என்கிறார் நா.முத்துக்குமார்.
மழையை நா.முத்துக்குமார் "ஆயிரம் அருவியாய் அன்பிலே நிறைக்கிறாய்" என்கிறார். மழையை 'ஆயிரம் அருவி' என்கிறார்.

"உதிர்வது.. பூக்களா?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?"
பூக்கள் உதிரும். நான் கற்பனையில் வளர்த்த காதல் பூக்கள் எப்படி உதிரும் எனக் கேட்கிறார் :)

காதல் கொண்டேன் படத்தில் தொடங்கிறது யுவன் நா.முத்துக்குமாரின் கூட்டணி. யுவன் தன் இசை வரலாற்றுச் சொத்துக் குவிப்பின் பாதிப்பக்கங்களை நா.முத்துக்குமாருக்கு உயில் எழுதிக் கொடுக்க வேண்டும். அத்தனைப் பாடல்கள். அத்தனையும் முத்துக்கள்.

"தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் மனம் பாழாய்ப்போகும்' என்ற ஒற்றை வரியில் மொத்தப்படத்தின் ஏக்கத்தையும் போட்டு உடைத்தே விடுகிறார்.
"காதல் இல்லை, காமம் இல்லை. இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை" என அந்த உறவைக் காதலையும் தாண்டி தூக்கிப் பறக்கவிட்டு ரசிக்கிறார்.

அதேபோலத்தான் 7ஜி யின் நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலில். மொத்த கதையின் ஆன்மாவையும் ஒரு பாடலுக்குள் அடக்கிவிடுவது சவால். அதை ஆண் பாடும் நினைத்து நினைத்துப் பார்த்தேன் பாடலுக்கான கேள்விகளை எல்லாம் பெண் பாடும் பாடலில் சொல்லிவிடுவார்.

இயக்குனர் ராம் உடன் அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்பவை.

கற்றது தமிழ் படத்தில் அவர் எழுதுகிறார் "காதல் நெஞ்சில் வந்துவிட்டால் காசும் பணமும் தேவையில்லை. கடவுளாக மாறிவிட்டால் கொலைகள் செய்வதில் குற்றமில்லை" என. தமிழின் மிகவும் காம்ப்ளிகேட்டாக வெளியான ஒரு படத்தின் பாதிக்கதை இது.

"இந்தப் புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா? இந்த பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?" என்கிறார்.

யுவனும், நா.முத்துக்குமாரும் இணைந்து எனக்குத் தெரிந்து மூன்று பாடல்கள் தெய்வம் என்று தொடங்கும் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். மூன்றுமே ஆன்மாவைத் தொடுபவை.
தெய்வம் வாழ்வது எங்கே - வானம்
தெய்வம் என்பதென்ன - திருடன் போலீஸ்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடிபில்லா

இதில் இரண்டு பாடல்கள் அப்பாவைப் பற்றிய பாடல்கள். நா.முத்துக்குமார் சிறு வயதிலேயே தாயை இழந்தவர். சிறுவயதில் இருந்தே வறுமையின் வலி அறிந்தவர். அதனால் அவர் பாடல்களில் எல்லாம் அன்பு நிறைந்திருக்கும். தன்னம்பிக்கை கொப்பளிக்கும். வறுமையின் வலியை உரக்கச்சொல்லும்.

அங்காடித்தெரு படத்தில் அவர் எழுதிய 'கண்ணில் தெரியும் வானம்' பாடல் அவர் எழுதியதிலேயே அதி அற்புதப்பாடல் என்பேன். தன்னம்பிக்கையையும் வலியையும் ஒருசேரக் கடத்தும்.

"எதையும் விற்கும் எந்திர உலகம் எல்லாம் இங்கே உண்டு. மனிதம் மட்டும் தேடிப்பார்த்தும் எங்கும் இல்லை.
கண்ணும் காதும் கையும் காலும் இல்லா மனிதர் உண்டு. வாயும் வயிறும் இல்லா மனிதர் எங்கும் இல்லை."
இந்த உலகிலேயே பசிதான் மிகப்பெரும் மிருகம் என்கிறார்.

நா.முத்துக்குமாரைப் பற்றி அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யாரைக் கேட்டாலும் அவர்கள் சொல்வது, 'நா.முத்துக்குமார் பேரன்பின் ஆதி ஊற்று'. உதவி என்று யார் தன்முன் வந்து நின்றாலும் அவர்களுக்காக கரம் நீட்டாமல் இருந்ததே இல்லை.

நா.முத்துக்குமார் எழுதியதில் அவருக்குப் பிடித்த இரண்டு பாடல்கள் இருக்கின்றன. ஒன்று. 'உனக்குள்ளே மிருகம்' - 'பில்லா2' படத்தில் இருந்து. இன்னொன்று 'பொய்க்கால் குதிரை' - 'சமர் படத்திலிருந்து.

உனக்குள்ளே மிருகம் பாடலில்,
'வலியதுதான் உயிர்பிழைக்கும். இதுவரையில் இயற்கையின் விதி இதுதான்' என்ற வரிகளையும்,
பொய்க்கால் குதிரை பாடலில்,
'சுடலையிலே எரியும்வரை சூத்திரம் இதுதான் கற்றுப்பார்.
உன் உடலைவிட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார்'

இந்த இரண்டு வரிகளையும் அவர் தன் வாழ்நாளின் மேற்கோள்களாகக் காட்டுகிறார். 'எந்த ஒரு விஷயத்தையும் உன் உடலை விட்டு வெளியேறி நீ வேறொரு மனிதனாக அதை அணுகச் சொல்கிறார். நிறைய விடைகள் கிடைக்கும் என்பது உண்மைதான் இல்லையா?

இருப்பதிலேயே கலைஞர்களுக்கு மட்டும்தான் மரணம் என்பதே இல்லை. இயக்குனர் ராம் அவர்கள் சொன்னது போல "முத்து வாழ்ந்துகொண்டிருப்பான். அவன் பாடல்கள் இசைக்கப்படும் ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்துகொண்டிருப்பான்."

- பாலகுருநாதன்

More News

ராகவா லாரன்ஸ் படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் ரிலீஸ் ஆன தினமே 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டத்தினால் பெரும் சிக்கலை படக்குழுவினர் சந்தித்தனர்...

விமான பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிக்பாஸ் பங்கேற்பாளர்

பிக்பாஸ் தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நீங்க எல்லோரும் போய் சாவுங்க: எரிச்சலின் உச்சத்தில் ரைசா

சக்தி இல்லை என்றால் சிவன் இல்லை என்பது உலக வழக்கு. சக்தி இல்லையேல் காயத்ரி இல்லை என்பது பிக்பாஸ் வழக்கு. சக்தி போன சோகத்தில் இருந்து மீளாத காயத்ரி தனது அத்தனை கோபத்தையும் ரைசா மீது காட்ட தொடங்குகிறார் என்பது இன்றைய புரமோ வீடியோவில் இருந்து தெரியவருகிறது...

ரூ.38 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண பில் அனுப்பிய மின்வாரிய துறை

மின்வாரிய கட்டணம் சில சமயம் திடீரென லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வந்து வீட்டின் உரிமையாளரின் மாரடைப்புக்கு காரணமாக அமையும், அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு ரூ.38 ஆயிரம் கோடி மின்கட்டண பில் வந்துள்ளது...

ஆனந்த யாழை மீட்டிய அற்புத கவிஞர் நா.முத்துகுமார்

தமிழ் திரையுலகில் ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்த ஒரு கவிஞர் திடீரென தனது பயணத்தை முடித்து கொண்டது திரையுலகிற்கு மட்டுமின்றி ஒவ்வொரு ரசிகனுக்கும் மிகப்பெரிய இழப்பு...