லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியின் கதையில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்'. சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ் கிரண், சுவாசிகா, கீதா கைலாசம், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிக்கியிருக்கிறது.
இன்பாவுக்கு ( சூரி) அக்கா கிரிஜா ( சுவாசிகா) மேல் அளவு கடந்த அன்பு. அக்காவுக்காக எதையும் செய்வார் இன்பா. 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கும் கிரிஜா மற்றும் ரவி (பாபா பாஸ்கர்) தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி பல விரதங்களை மேற்கொள்கின்றனர். குழந்தை இல்லாத காரணத்தினால் மாமியார் துவங்கி சுற்றி இருப்பவர் அத்தனை பேரின் பேச்சும், திட்டுமாக கேட்டு வாழ்ந்து வரும் கிரிஜா குழந்தை பேறு அடைகிறார். பேசிய வாய்கள் நின்று போக வருகிறான் லட்டு. இதற்கிடையில் இன்பா மற்றும் டாக்டர் ரேகா இருவருக்கும் காதல் , திருமணத்தில் முடிகிறது. திருமண வாழ்க்கையில் குறிக்கிடுகிறான் லட்டு குட்டி. கணவன் மனைவி சண்டை குடும்ப சண்டையாக மாறுகிறது. முடிவு என்ன என்பது மீதி கதை.
'கிழக்கு சீமை' தாய்மாமன் விஜயகுமாருக்கு பிறகு தாய்மாமன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நிற்கிறார் சூரி. அதிலும் திருநெல்வேலி , மதுரை, போன்ற தென்தமிழகத்து தாய் மாமன்களை அப்படியே பிரதிபலிக்கிறார். உணர்வுகளையும் மிக அற்புதமாகவும் அளவாகவும் வெளிப்படுத்துகிறார். அவரைத் தொடர்ந்து மனதில் நிற்கும் இரண்டு கதாபாத்திரங்கள் ராஜ்கிரண் மற்றும் விஜி சந்திரசேகர். இவ்விரு ஜோடி உங்களை கண்கலங்க வைக்கவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் கல்நெஞ்சர்கள் தான். சுவாசிகா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி அப்படி ஒரு அக்கா இப்படி ஒரு மனைவி யாருக்கு தான் கசக்கும் . இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நம் வீட்டுப் பெண்களை ஞாபகப்படுத்துகிறார்கள். அவ்வளவு எதார்த்தமான நடிப்பு, எமோஷனல் , கண்ணில் வழிந்து ஓடுவதற்கு தயாராக இருக்கும் கண்ணீர் என நிச்சயம் தாய்க்குலங்கள் கொண்டாட ஏத்த கதாநாயகிகள் தான். அடடே பாபா பாஸ்கர் அவருக்குள் இப்படி ஒரு நடிகனா என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். ஜெயபிரகாஷ் மற்றும் பால சரவணன், மனதைப் பிசையும் அம்மாவாக கீதா கைலாசம் உள்ளிட்டோர் அவரவர் பங்கை தேவைக்கேற்ப வழங்கியிருக்கிறார்கள்.
தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவில் திருச்சியும் அதன் சுற்றுவட்டார அழகும் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சின்ன காட்சிக்கு கூட அய்யர் மலையின் உயரம் வரை படக் குழு ஏறி இருக்கும் மெனக்கெடல் தெரிகிறது. கணேஷ் சிவா எடிட்டிங்கில் மேஜிக் நிகழ்த்தி இருக்கிறார். இந்தக் குடும்பம் எப்படி சேரப்போகிறது , முடிவு என்ன என எந்த குழப்பமும் இல்லாமல் இது ஒரு சாதாரணமான குடும்ப கதை இதில் தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம் என முடிவெடுத்து எளிமையாக படத்தை செதுக்கியிருக்கிறார். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையில் பொட்டு தொட்ட பௌர்ணமி பாடல் ரீமேக் ஆன கண்ணாலே பேசும் பாடல் அருமை. விழுதே பாடல் உணர்வுக் குவியல். தமிழுக்கு நல்வரவு ஹிஷாம்.
படத்தில் குழந்தைகள் என்றாலே தன் குழந்தைகளை மட்டும் தான் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் இயக்குனர் கறாராக இருந்திருக்கிறார். அதிலும் லட்டு கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் இயக்குனரின் மூத்த மகன். அவருக்காகவே படம் எடுத்தது போல் படம் முழுக்க அந்தச் சிறுவன் மட்டும்தான் தெரிகிறார்.பத்துக்கு பத்து வீட்டுக்குள்ளேயே இரண்டு மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் நம் இந்திய கலாச்சாரத்தில் ஒரு சிறுவனை சமாளித்து இவர்களால் ஒன்று சேர முடியவில்லை என்பது மிகைப்படுத்துதலாக தெரிகிறது. போலவே எதற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த தாய்மாமன் பாசம் ஒரு கட்டத்தில் நமக்கே சலிப்பை உண்டாக்கும் அளவிற்கு திணிக்கப்பட்ட விஷயமாக தெரிகிறது. படத்தில் உண்மையாகவே தெளிவாக தெரிந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி மட்டுமே. குழந்தை ஹைபர் ஆக்டிவாக இருக்கிறான், அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதற்கு ஏற்ப இரவு முழுவதும் சிறுவன் தூங்காமல் இருப்பதை காமெடியாக கடந்து செல்ல முடியவில்லை. மேலும் தன் மகன் என்பதற்காக காது குத்தும் காட்சியில் மொட்டை கூட அடிக்காமல் காட்சியின் எதார்த்தத்தை இயக்குனர் மீறியதாக தெரிகிறது. அதைக் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி துவங்கி வைத்த குடும்பத் திரைப்படங்கள் டிரெண்ட் தற்போது மாமன் வரை தொடர்கிறது. நிச்சயம் தாய்க்குலங்கள், குழந்தைகள் கொண்டாடும் குடும்ப படமாக ' மாமன் ' படமும் ஏற்றுக் கொள்ளப்படும்.
Rating: 2.75 / 5.0
Showcase your talent to millions!!
മലയാളം Movie Reviews






Comments