மாரி- திரைவிமர்சனம்

  • IndiaGlitz, [Friday,July 17 2015]

மாரி - சொன்னதைத் தருகிறான்

நடிகர் தனுஷ் விருதுகளை குவிக்கும் படங்களிலும் நடிக்க முடியும், வணிக நோக்கப் படங்களிலும் தூள் கிளப்ப முடியும்...அவரும் கொஞ்சம் வித்தியாசமான முயற்சிகளைச் செய்யும் ஆர்வம் மிக்க இயக்குனர் பாலாஜி மோகனும் இணைந்து, “இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம்” என்ற அறிவிப்புடன் வழங்கியிருக்கும் படம் 'மாரி'.

அனைத்தையும் மறந்துவிட்டு திரையில் தோன்றுவதை ரசிக்க வா, லாஜிக் எல்லாம் பார்க்காதே' என்ற கட்டளையை அன்பான பணிவான வார்த்தைகளில் பார்வையாளர்கள் மூளைக்குள் புகுத்திவிடும் வாசகம் இது. இந்த புத்திசாலித்தனம் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறதா? பொழுதுபோக்குப் படம் பொழுதை ரசித்துப் போக்க வைக்கிறதா?

படத்தின் ட்ரைலரின் தொடக்கம்தான் படத்தின் தொடக்கமும். மாரி (தனுஷ்) என்பவனின் பின்னணியை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.ஐ அர்ஜுனுக்கு (விஜய் ஏசுதாஸ்) ஒரு கான்ஸ்டபிள் (காளி வெங்கட்) விளக்குவதில் தொடங்குகிறது கதை. எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய ரவுடியை கொன்றவன் புறாக்கள் வளர்த்து போட்டி நடத்தும் மாரி என்று ஒரு சந்தேகம் நிலவுகிறது. அதோடு அரசியல் செல்வாக்குமிக்கவரும் செம்மரக் கடத்தலிலும் புறாப் போட்டியிலும் ஈடுபடுபவருமான வேலுவின் (சண்முகராஜன்) நம்பிக்கைக்குரியவன் மாரி. இதனால் ஏரியாவாசிகள் அவனுக்குப் பயந்து கப்பம் கட்டுகிறார்கள். அவன் லோக்கல் தாதாவாக உருவெடுக்கிறான்.

மாரியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குடியேறும் ஸ்ரீதேவி (காஜல் அகர்வால்) அங்கு ஒரு டிசைனர் ஜவுளிக் கடை வைக்கிறாள். அதன் வருமானத்தில அடாவடியாகப் பங்குகேட்கும் மாரி அவளுக்கு பல்வேறு இன்னல்கள் தருகிறான். அதே நேரம் அவளையும் அவளது கடையையும் கந்து வட்டிக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான்.

கொலை வழக்கில் மாரியையும் செம்மரக் கடத்தல் வழக்கில் வேலுவையும் கைது செய்து அவர்கள் சாம்ராஜ்யத்தை அழிக்கத் துடிக்கும் அர்ஜுன் ஒரு தந்திரத் திட்டத்தின் மூலம் அதைச் செய்து முடிக்கிறான். ஆனால் அர்ஜுனின் நோக்கங்கள் வேறு. மாரி, அந்த நோக்கங்களை முறியடித்து வேலுவைக் காப்பாற்றி மீண்டும் அந்தப் பகுதியை (மக்கள் ஆதரவுடன்) தன் வசம் கொண்டுவருவதுதான் மீதிக் கதை.

இது முழுக்க முழுக்க தனுஷ் படம். தனுஷ் ரசிகர்கள் கொண்டாட படத்தில் பல விஷயங்கள்ள் இருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் மெலிந்த உடல்வாகு கொண்ட தனுஷ் பல படங்களில் தன் சண்டைத் திறமையை நிரூபித்துள்ளார். இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க வைக்கிறார்.'தர லோக்கல்' பாடல்களில் திரையில் அவர் பட்டையைக் கிளப்ப நம் கால்களும் நடமாடத் துடிக்கின்றன. தனுஷ் பேசும் பஞ்ச் வசனங்களுக்கும் மற்றவர்கள் பஞ்ச் வசனங்களுக்கும் வித்தியாசம் உண்டு. எதிரியை அடித்துவிட்டு பொறிபறக்க ஆக்ரோஷத்துடன் வசனம் பேசும் வகையறாவை அவரால் செய்ய முடியும். ஆனால் அமைதியாக நிதானமாக சூசகமாக நக்கலாக பஞ்ச் அடிக்கும் லாவகம் அவர் அளவுக்கு வேறு யாருக்கும் கைவரவில்லை என்று சொல்லலாம். தனுஷின் இந்தத் தனித்தன்மையை இயக்குனர் வெகு சிறப்பாக கையாண்டிருக்கிறார். இதற்கு ட்ரைலரிலேயே ஒரு உதாரணம் இருந்தது. படத்தில் அப்படிப்பட்ட தருணங்கள் பல உண்டு. அவை வரும்போது கைதட்டல்களும் விசிலோசையும் காதைப் பிளக்கின்றன.

பாலாஜி மோகனின் அதற்காக கதை-திரைக்கதையில் கோட்டைவிட்டுவிடவில்லை. திரைக்கதை பெருமளவில் தொய்வின்றிச் செல்கிறது (முதல் பாதியில் தனுஷ்-காஜல் மோதல் காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதியில் ஆட்டோ ஓட்டும் காட்சிகளைத் தவிர). பொழுதுபோக்குப் படத்துக்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்? அதோடு தனுஷின் தனித் திறமைகளையும் நட்சத்திர அந்தஸ்தையும் சரியாகப் பயன்படுத்தி அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களும் ரசித்துப் பார்க்கும் வகையில் ஒரு படத்தைக் கொடுத்திருப்பது இயக்குனரின் திறமைதான்.

காஜலுக்கு நாயகனை முதலில் வெறுத்து பிறகு அவனால் ஈர்க்கப்படும்' வழக்கமான கதாநாயகி வேடமதான். அதை அவர் குறையின்றிச் செய்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது பாத்திரம் இண்டர்வெல் திருப்பத்துக்கும் பயன்படுவது சுவாரஸ்யம்.

விஜய் ஏசுதாஸ் நடிகராக அறிமுகமாகியிருக்கும் படம் இது. சிறப்பாகச் செய்திருக்கிறார் குறையேயில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் முதல் பாதியில் துணிச்சலான காவல்துறை அதிகாரியாகவும் இரண்டாம் பாதியில் நயவஞ்சக்காரனாகவும் செயல்படும் இரண்டு அம்சங்களையும் சொதப்பாமல் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்ததால் ஒரு நடிகருக்கு அதிக வாய்ப்புகள் குவியப் போகின்றன என்றால் அது ரோபோ ஷங்கருக்குத்தான். தொலைக்காட்சியிலும் திரைப்படங்களில் சின்னச் சின்ன வேடங்களிலும் இவரது நகைச்சுவைத் திறமை பளிச்சிட்டிருக்கின்றன. இந்தப் படத்தில் தனுஷின் அடியாள் சனிக்கிழமையாக வந்து படத்துக்கு நகைச்சுவை அம்சத்தை அள்ளிக் கொடுக்கிறார் மனிதர். ஆங்கிலம் பேசுவதிலும் குழந்தையைக் கொஞ்சுவதுபோல் பேசுவதிலும் கைதட்டல்களை அள்ளுகிறார்.

அநிருத் ரவிச்சந்தரின் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட்டம்போட வைக்கும் கடமையை செவ்வனே செய்கின்றன. தனுஷின் ஹீரோயிசக் காட்சிகள் பொறிபறப்பதில் இவரது பின்னணி இசைக்கும் பெரும்பங்கு உண்டு.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஒரு செந்நிறத்தன்மையை வழங்கியிருப்பது கதைக் களத்துக்குப் பொருந்துகிறது. படத்தில் ட்ரைலரிலேயே அறிமுக படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கேவின் திறமை தெரிந்துவிட்டது. படத்திலும் சோடைபோகவில்லை.

பொழுதுபோக்குப் படம் என்று சொல்லிவிட்டார்கள். பொழுதையும் ஓரளவு போனது தெரியாமல் போக்க வைத்துவிட்டார்கள். ஆனால் மற்ற வெகுஜனப் படங்களில் இல்லாதது இதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறதே? தனுஷ் பெரிய அளவில் அடியாள் பலம் இல்லாத ஒரு லோக்கல் தாதா. ஒரு காவல்துறை அதிகாரியை சிக்கவைத்து வீழ்த்துவதை அத்தனை எளிதாக சாதிக்கிறார் காவல்துறை அதிகாரி அவரை சிக்கவைப்பதில் இருக்கும் புத்திசாலித்தனமும் சுவாரஸ்யமும் கூட இதில் இல்லை.

செம்மரக் கட்டை கடத்தல் விவகாரத்தை கதையில் புகுத்தியிருப்பது தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்புகிறது. ஆனால் அது கதையை நகர்த்தும் கருவியாக மட்டுமே பயன்படுகிறது. அந்த இடத்தில் வேறொரு பொருள் கூட இருந்திருக்கலாம். செம்மரக் கடத்தலும் காட்டிக்கொடுத்தலும் மிக சாதாரணமாக நடக்கின்றன.

அப்பாவி மக்கள் அதிக மாமூல் வாங்குபவரைவிட குறைவான மாமூல் வாங்குபவரிடம் சரணைடைவதுதான் கதை. நல்ல கதை(!)

வில்லன் செம்மரம் கடத்துவதற்காக அவருக்கு தண்டனைப் பெற்றுத் தருகிறார் நாயகன். ஆனால் நாயகனின் மரியாதைக்குரியவரும் செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்தான். இதையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று நினைத்துவிட்டனரோ?.

நாயகனும் ”நான் கெட்டவன்தான்” என்று சொல்லிக்கொள்பவன் கெட்டவனை நாயகனாக்குவதில் பிரச்சனை இல்லை. பல படங்கள் அப்படி வந்து வெற்றிபெற்றிருக்கின்றன. ஆனால் அதற்கெதற்கு புதிய பாதை' வகையறா நியயப்படுத்தல்கள்? (”அவர் பொறந்து அனாதையா வளந்தப்ப இவனுங்க யாரும் உதவி செய்யல. அவரு எதுக்கு இவனுங்களுக்கு பாவம் பாக்கணும், நியாயமா நடந்துக்கணும்?”). “கலப்படமான நல்லவனா இருக்கறத விட சுத்தமான கெட்டவனா இருக்கறதே மேல்” என்கிறார் நாயகன். இது போன்ற சமூக சீர்திருத்த (!) வசனங்கள் இருப்பதை பொறுத்துக் கொள்வதாகவே வைத்துக்கொள்வோம். பிறகு எதற்கு அவர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கல்விக்கு யாருக்கும் தெரியாமல் உதவுபவராக இருக்கிறார். அப்போது அவர் ”கலப்படமான கெட்டவரா”? அது இன்னும் மோசமல்லவா?.

தவறானவற்றை ரசிக்கத்தகக்தாகவும் வியக்கத்தக்கதாகவும் முன்னிறுத்துபவை இது போன்ற நியாயப்படுத்தல்கள்தான். இளம் இயக்குனர்களிடமிருந்து இப்படி ஒரு பார்வை வெளிப்படுவது பொழுதுபோக்குப் படங்களிலும் ஏற்கத்தக்கதல்ல.

இந்தக் குறைகளெல்லாம். கடந்துவிட்டுப் பார்த்தால் இந்த மாரியை தனுஷ் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடலாம். மற்றவர்கள் ஆர அமர ரசிக்கலாம். பாலாஜி மோகன் காசுகொடுத்துப் படம் பார்க்க வருபவரை ஏமாற்றவில்லை.

மதிப்பெண்-2.5/5

More News

'பாகுபலி' படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் எடிட்டர்

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் வெற்றிப்படமான 'பாகுபலி' கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு...

VSOP ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றி கூட்டணியான எம்.ராஜேஷ் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க". இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

'பாகுபலி'யில் நடிக்கும் வாய்ப்பை ஸ்ரீதேவி இழந்தது எப்படி?

கடந்த வாரம் வெளியான இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்டமான திரைப்படமான பாகுபலி' ...

13 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணைந்த நடிகை

இளையதளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பாடலையாவது பாடிவரும் வழக்கத்தை கடந்த பல வருடங்களாக கடைபிடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.....

மதனிடம் இருந்து மதன் பெற்ற 'பாயும் புலி'

வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்த விஷாலின் 'பாயும் புலி' படத்தின் உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது...