விமல் படத்துக்கு எதிராக பெண்கள் போராட்டம்! இலவச புரமோஷனா?
- IndiaGlitz, [Thursday,December 13 2018]
ஒரு திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடந்தால் அந்த படத்திற்கு அது இலவச விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எங்கள் படத்திற்கும் எதிராக போராட்டம் செய்யுங்கள் என ஒருசில இயக்குனர்களே சொல்லும் வகையில் போராட்டங்கள் அமைந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த விமல் நடித்த 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாச காட்சிகளும் இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் போஸ்டர்களிலும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றிருந்தது பலரை முகம் சுழிக்க வைத்தது
இந்த நிலையில் திருப்பூரில் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கை இன்று மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து மாதர் சங்கத்தினர் கலைந்து சென்றனர். இந்த போரட்டம் குறித்த செய்தி ஒருசில ஊடகங்களில் வந்துள்ளதை இந்த படத்திற்கு கிடைத்த இலவச புரமோஷனாக கருதப்படுகிறது.