Download App

Madura Veeran Review

மதுர வீரன்:  மண்ணின் மனம் கமழும் ஜல்லிக்கட்டு வீரன்

மலேசியாவில் எஞ்சினியர் பணிபுரியும் சண்முகப்பாண்டியன் திருமணத்திற்கு பெண் பார்க்க பல வருடங்களுக்கு பின்னர் மதுரை அருகேயுள்ள தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். வந்த இடத்தில் எந்த ஜல்லிக்கட்டுக்காக தனது தந்தை சமுத்திரக்கனி உயிரை விட்டாரோ, அந்த ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் பல வருடங்களாக ஊரே இரண்டுபட்டு இருப்பதை தெரிந்து கொள்கிறார். அந்த ஊர் மக்களின் வேண்டுகோளின்படி ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த சண்முகப்பாண்டியன் எடுக்கும் முயற்சிக்கு அதே ஊரில் உள்ள இரு பிரிவினர்களின் தலைவர்களான வேலராமமூர்த்தி மற்றும் மைம்கோபி ஆகியோர் இடைஞ்சல் கொடுக்கின்றனர். இந்த நிலையில் தனது தந்தையை கொலை செய்த உண்மையான குற்றவாளியையும் அவர் கண்டுபிடிக்கின்றார். ஜல்லிக்கட்டை நடத்தி காண்பித்தாரா? தந்தையை கொலை செய்த உண்மையான குற்றவாளியை பழிவாங்கினாரா? திருமணத்திற்கு பெண் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை

முதல் படமான 'சகாப்தம்' படத்தில் சறுக்கினாலும் இரண்டாவது பாதியில் நிமிர்ந்து நிற்கும் வகையிலான கேரக்டர் சண்முகப்பாண்டியனுக்கு. அதை அவர் சரியாக பயன்படுத்தியிருப்பதும் புத்திசாலித்தனம். தன்னுடைய கேரக்டரை விட சமுத்திரக்கனியின் கேரக்டர் வலுவானது என்று தெரிந்திருந்தும் அவருக்கான இடத்தை விட்டு கொடுத்திருப்பது அவருடைய பெருந்தன்மையையும், யாருடைய தலையீடும் இந்த படத்தில் இல்லை என்பதையும் காட்டுகிறது. ஜல்லிக்கட்டுக்காக நண்பர்களுடன் களமிறங்கும் காட்சியிலும், ஜல்லிக்கட்டை எந்த தடை வந்தாலும் நடத்தியே தீருவேன் என்று பஞ்சாயத்தில் சவால் விடும் காட்சியிலும், அப்பாவை கொலை செய்த கொலைகாரனை பழிவாங்கினால் ஜல்லிக்கட்டு நின்றுவிடும் என்று நிதானம் காட்டும் இடத்திலும் சண்முகப்பாண்டியன் நடிப்பு ஒளிர்கிறது. மாட்டில் எத்தனை வகை என்பதை மூச்சுவிடாமல் பேசும் வசனம் ஆச்சரியம் அளிக்கின்றது. மேலும் ஆக்சன் காட்சிகளில் தந்தைக்கு தப்பாத மகன் என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் நாயகி மீனாட்சியிடனான காதல் காட்சியில் மட்டும் கொஞ்சம் கூச்சம் இருப்பது தெரிகிறது.

வழக்கமான தமிழ்ப்படங்கள் போலவே இந்த படத்திலும் பெயருக்கும் பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நாயகி கேரக்டரில் மீனாட்சி நடித்துள்ளார். பாடல் காட்சியில் கூட சேலையில் தோன்றி ஹோம்லி லுக்குடன் உள்ளார்.

சமுத்திரக்கனிக்கு வெயிட்டான கேரக்டர். இயற்கை விவசாயம், ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரிய விளையாட்டு, ஜாதி துவேஷம் குறித்து அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அபாரம். ஒரு பெரிய மனிதருக்குள்ள கம்பீரம் உடல் வாகிலும் இருப்பதால் கேரக்டருக்கு பொருத்தமாக தோன்றுகிறார். இவருடைய பிளாஷ்பேக் பகுதி கொஞ்சம் நீளமாக இருந்தாலும் ரசிக்கும் வகையில் உள்ளது

தன்னுடைய மாட்டை அடக்கிய வேற்று ஜாதிக்காரனின் கையை கட்டி வைத்து வெட்டும் ஜாதி வெறியர் கேரக்டர் வேலராமமூர்த்திக்கு. அதேபோல் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடப்பதா? என்று பொங்கும் இன்னொரு ஜாதி வெறியர் மைம்கோபி. இருவருமே தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். இவர்கள் இருவரும் சண்முகப்பாண்டியன் நடத்தவுள்ள ஜல்லிக்கட்டை தடுக்க எடுக்கும் முயற்சிகள், அவை சண்முகப்பாண்டியனால் முறியடிக்கப்படும் காட்சிகள் சுவாரஸ்யமானவை. பாலாசரவணனின் காமெடி சீரியஸாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதைக்கு ஒரு சிறு ஆறுதல்

இயக்குனர் பி.ஜி.முத்தையா ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் மண்ணின் மனம் மாறாமல் காட்சிகள் அனைத்து செயற்கைத்தனம் இல்லாமல் உருவாக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள். நாம் வாழும் காலத்தில் நடந்த ஒரே வெற்றி போராட்டமான மெரினா போராட்ட காட்சிகளை சரியாக படத்தில் இணைத்திருப்பது புத்திசாலித்தனம். அதிலும் விஜய், விஜய்காந்த் பேச்சும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்னர் காளையை வைத்திருப்பவர்கள் எப்படியெல்லாம் ஆயத்தமாவார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியதற்காகவே இயக்குனரை பாராட்டலாம். இருப்பினும் படம் முழுக்கவே ஜல்லிக்கட்டை மையாக வைத்துள்ள கதை என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் காட்சிகள் ரிப்பீட் ஆவது போன்ற ஒரு சலிப்பு ஏற்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை இன்னும் உணர்ச்சிகரமாக காண்பித்திருக்க சரியான வாய்ப்பு கிடைத்திருந்தும் அதை மிஸ் செய்துவிட்டார் இயக்குனர். ஆனால் அதே நேரத்தில் சமுத்திரக்கனியை கொலை செய்தவர் யார் என்ற என்பதை கடைசி வரை சஸ்பென்ஸாக கொண்டு சென்றது சிறப்பு

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளது. யுவபாரதி வரிகளில் ஜல்லிக்கட்டுக்கான உணர்ச்சிமிகுந்த வரிகள் மீண்டும் மெரீனா போராட்டத்தை ஞாபகப்படுத்துகிறது. கிராமத்துக்கே உரிய பின்னணி இசையும் ஓகே. பிரவீண் கே.எல் எடிட்டிங் கச்சிதம்

மொத்தத்தில் மண்ணின் மணத்துடன், ஜல்லிக்கட்டு போராட்டத்தை நம்கண்முன் நிறுத்தும் இந்த 'மதுர வீரன்' நிச்சயம் ரசிகர்களின் மனதையும் கவர்வான் என்பது உறுதி.

Read The Review in English: Madura Veeran

Rating : 2.5 / 5.0