ஆடு முதல்… கார் வரை ரூ.2 கோடிக்கு சீர்வரிசை? பொதுமக்களை வாயை பிளக்க வைத்த  மாஜி எம்எல்ஏ!!!

  • IndiaGlitz, [Saturday,November 07 2020]


 

கடந்த சில தினங்களாக பொருட்களைக் குவித்து வைத்து சீர் வரிசைக் கொடுப்பது போல ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோவில் ஆடு முதல் கார் வரை ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இடம் பிடித்து இருந்தன. அதனால் வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது மதுரையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் வீட்டுத் திருமணம் எனத் தெரிய வந்துள்ளது. மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வாக இருந்த தமிழரசு தனது மகள் ஆர்த்தியின் திருமணத்திற்குத்தான் இத்தனை சீர்வரிசைகளையும் கொடுத்துள்ளார். அந்த சீர்வரிசையில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் இடம்பெற்று இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் எம்எல்ஏ தமிழரசுவின் மகள் ஆர்த்திக்கும் கொடிமங்கலம் வி.பி.வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 4 ஆம் தேதி நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்று உள்ளது. இத்திருமணத்திற்கு தமிழரசு தனது மகளுக்காக ஆடுகள், கார்கள், சைக்கிள், டிராக்டர், நில புலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் அனைத்து வகையான பொருள்களும் சீர்வரிசையாக வழங்கி உள்ளார்.

இந்நிலையில் சீர்வரிசை பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி எனக் கூறப்படுகிறது. மண்டபத்தில் காட்சிக்கு வைத்திருந்த இந்தப் பொருட்களைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுவாக உசிலம்பட்டி போன்ற சில மாவட்டங்களில் பெண்களின் திருமணத்தின்போது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையு சீர்வரிசையாகக் கொடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் டிராக்டர் முதற்கொண்டு ஆடு வரைக்கும் சீர் வரிசைகளை அடுக்கிக் கொடுத்தது இதுதான் முதல்முறை.