மம்முட்டி-மோகன்லாலுக்கு துபாய் அரசு கொடுத்த கெளரவம்!

பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கௌரவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த கோல்டன் விசாவை பெறுவதற்கு சில தகுதிகள் உள்ளது. அந்நாட்டின் அரசாங்கம், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் உள்ளவர்கள், திறமையான மாணவர்கள் மற்றும் அறிவியல் துறையில் தனிப்பட்ட சிறப்பான திறன் உள்ளவர்கள் மற்றும் முக்கியமான செலிபிரிட்டிகள் ஆகியோர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு விட்டால் அவர் அந்நாட்டின் குடிமக்கள் போல் பத்து வருடங்கள் தங்கி இருக்கலாம் என்பதும் அந்நாட்டில் முதலீடுகள் செய்ய அனைத்து உரிமையும் அவருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் தற்போது பிரபல மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவருக்கும் இந்த கோல்டன் விசாவை வழங்கி உள்ளது. இதனை அடுத்து மம்முட்டி மோகன்லால் ஆகிய இருவரும் கோல்டன் விசாவை பெறும் முதல் மலையாள நடிகர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரகம் நாடு, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் அவர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.