குர்ஆனை எரித்தவருக்கு அபராதம்! கருத்து சுதந்திரம் பறிக்கப் பட்டதாக ஆதரவாளர்கள் எதிர்ப்பு?


Send us your feedback to audioarticles@vaarta.com


லண்டனில் துருக்கிய தூதரகத்திற்கு முன்,” இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம்” என்று கத்திய படியே, குர்ஆன் நூலை எரித்த 50 வயதான ஹமித் கோஸ்கன் என்பவருக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
ஃபெப்ரவரி 13ஆம் தேதியன்று, தூதரகத்தின் முன் கூச்சலிடும் போது ஹமித் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காகவும், பொது இடத்தில் அமைதிக் குலைவை ஏற்படுத்தியதற்காகவும், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அவர்’ தாம் அமைதியாகவே போராட்டம் நடத்திய’தாக நீதிமன்றத்தில் வாதாடினார்.
ஒரு மத நூலை எரிப்பதன் மூலம் ஒருசாராரை புண்படுத்துவது அவர் நோக்கமாக இருக்கலாம். ஆனால், இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல. பொதுவெளியில் ஒழுங்கற்ற முறையில் எதிர்ப்பை வெளிக்காட்டி போராட்டம் நடத்தியதே நடவடிக்கைக்குக் காரணம்” என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மாவட்ட நீதிபதி ஜான் மெக்கர்வா, அவரது நடத்தை "ஆத்திரமூட்டுகின்ற ஏதாவது காரணத்தாலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தார் மீதுள்ள வெறுப்பாலோ தூண்டப்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.
துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட கோஸ்கன், சமூக வலைதளத்தில் துருக்கிய ஜனாதிபதி, நாட்டை தீவிரவாத இஸ்லாமியர்களின் கோட்டையாக மாற்றிவிட்டதாக நினைப்பதால், துருக்கிய அரசுக்கு எதிராக தாம் போராட்டத்தில் இறங்குவதாக பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இவருக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் 240 பவுண்ட் அபராதம் விதித்துள்ளது.
கோஸ்கனின் வழக்கை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ”பேச்சு சுதந்திரத்திற்கான ஒன்றிய அமைப்பு”, இந்த தீர்ப்பு பேச்சு சுதந்திரத்திற்கு அபாயம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், இதற்கு முழுமையான நியாயம் கிடைக்கும் வரை திரும்ப திரும்ப முறையீடு செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. தேவைப்பட்டால் இந்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
“இந்த தீர்ப்பு, பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல். இது மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான போராட்டத்தினாலும், பேச்சு சுதந்திரத்தினாலும் வெளிப்படுத்துவதை தடுக்கும்” என்று கூறிய கோஸ்கன், “ஒரு போராளியாக, இஸ்லாம் விடுக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக நான் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன்” என்று கூறினார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக், சமூக வலை தளத்தில் , ”…இந்த தீர்ப்பு, 2008 இல் பாராளுமன்றம் ரத்து செய்த " கடவுள் நிந்தனைச் சட்டத்தை( The blasphemy law) புதுப்பிக்கிறது" என்று கூறினார்.
பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் டேவ் பரேஸ் செய்தியாளர்களிடம்,”இங்கிலாந்தில் கடவுள் நிந்தனை சட்டம் எதுவும் இல்லை, அதை அறிமுகப்படுத்தும் நோக்கமும் அரசுக்கு இல்லை” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com
Comments