Download App

Marainthirunthu Paarkum Marmamenna Review

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன: பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்

அறிமுக இயக்குனர், அறிமுக நடிகராக இருந்தாலும் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்த அடுத்த படம், நல்ல புரமோஷன் செய்யப்பட்ட படம், சென்சாரில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பின்னர் மீண்டு வந்த படம் என்ற அளவில் பரபரப்பாகி இன்று வெளிவந்துள்ள 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்

இன்று சென்னையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று செயின் பறிப்பு பிரச்சனை. ஏற்கனவே இதுகுறித்து 'மெட்ரோ' உள்பட ஒருசில படங்கள் வெளிவந்த போதிலும் இந்த படம் அந்த பிரச்சனையை கொஞ்சம் ஆழமாக அலசுகிறது.

சென்னையின் முக்கிய பகுதியில் மைம்கோபி தலைமையிலான ஒரு குழு செயின்பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. ஹீரோ துருவா அந்த கொள்ளையர்களிடமே கொள்ளை அடிக்கின்றார். ஹீரோவை கண்டுபிடிக்கும் மைம்கோபி குழு ,அவரை தனது குழுவிலேயே சேர்த்து கொள்கிறது. கொள்ளையர் குழுவில் சேர்ந்து கொள்ளும் துருவா, அந்த கொள்ளையர்களையே அழிக்க திட்டமிடுகிறார்? அவரது திட்டம் நிறைவேறியதா? ஏன் கொள்ளையர்களை அழிக்க முடிவெடுக்கின்றார் என்பதுதான் படத்தின் கதை

ஹீரோ துருவா, பெயருக்கேற்றவாறு துருதுருவென இருக்கின்றார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஸ்மார்ட் ஹீரோ கிடைத்துவிட்டார். ஆக்சன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் வெளுத்து வாங்கும் துருவா, எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் திணறுகிறார். 

பிக்பாஸ் 2 சீசனில் பரபரப்பாக பேசப்படும் ஐஸ்வர்யா தத்தா தான் இந்த படத்தின் ஒரு நாயகி. போலீஸ் வேலைக்காக டிரைனிங் எடுப்பது முதல் ஹீரோவை ஒரு செயின் திருடனாக பார்த்து அதிர்ச்சி அடைவது வரை இவரது நடிப்பு ஓகே என்றாலும் இவரது கேரக்டர் படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறையே

துருவாவின் மனைவியாக நடித்திருக்கும் இன்னொரு ஹீரோயின் அஞ்சனாவின் நடிப்பு ஓகே. இவர் தமிழ் திரையுலகில் ஒரு சுற்று வரவும் வாய்ப்பு உள்ளது.

வழக்கமான அம்மாவாக வந்தாலும், சரண்யா பொன்வண்ணனின் கேரக்டரால் தியேட்டரில் கலகலப்பு ஏற்படுவது உண்மை. ரியல் எஸ்டேட்காரர்களை ஏமாற்றுவது, ஹீரோயின் அஞ்சனாவை பார்த்ததும் 'என் பையனை கட்டிக்கிறியா' என்று வெகுளியாக கேட்பது என யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

செயின் திருட்டு கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜேடி சக்கரவர்த்தி, மற்றும் ராதாரவி, மனோபாலா, மைம்கோபி, அருள்தாஸ் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. ஆனால் ஒரு த்ரில் படத்திற்கு தேவையான பின்னணி இசை இல்லை

பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவும், சான் லோகேஷ் படத்தொகுப்பும் ஓகே ரகம்

அறிமுக இயக்குனர் ராகேஷ், செயின் பறிப்பு குறித்து ஆய்வுகள், ஹோம்வொர்க் செய்து படத்தில் கச்சிதமாக திரைக்கதை அமைத்துள்ளார். ஒரு பெண் நள்ளிரவில் எப்போது நகைகளுடன் பயமின்றி சாலையில் நடந்து செல்கின்றாரோ அப்போதுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்' என்ற மகாத்மா காந்தியின் நல்ல கருத்தை சரியான திரைக்கதையுடன் விறுவிறுப்பான கதையை நகர்த்தியுள்ளார். பெண்களுக்கு அழகே நகைதான். ஆனால் அந்த நகையை போடவிடாமல் செய்துவிட்டீர்களே, 'எல்லோரும் பெண்களை கழுத்துக்கு கீழே தான் பார்ப்பாங்க, ஆனா நாம மட்டும் அவங்க கழுத்தை மட்டும்தான் பார்க்கணும்', போன்ற வசனங்கள் படத்தின் பலம். ஒரு செயின் திருடன் யார் யாரை குறிவைப்பான், திருட்டு நடப்பதற்கு முன்னர் என்னென்ன பாதுகாப்பு முறைகளை கையாள்வான், அவனுக்கு யார் யார் உடந்தையாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை விளக்கமாக கூறிய காட்சிகள், இன்றைய நகை அணியும் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய முறைகளையும் கூறியது அருமை. 

ஆனால் அதே நேரத்தில் ஒரு அறிமுக ஹீரோவுக்கான திரைக்கதையாக இல்லாமல், ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான பில்டப் திரைக்கதை படத்தின் பலவீனமாக கருதப்படுகிறது. ஒரு திருட்டு கும்பலை பிடிக்க போலீஸ் அதிகாரி போடும் திட்டங்கள் புத்திசாலித்தனமாக இல்லை. குறிப்பாக ஷுட்டிங் ஆர்டர் வாங்குவதற்காக கமிஷனர் மனைவியிடமே கொள்ளையடிக்க போடும் திட்டம் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. அதேபோல் ஒரு சீரியஸான த்ரில் படத்தில் அளவுக்கு அதிகமான ரொமான்ஸ் காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளும் தேவைதானா? என்பதை இயக்குனர் யோசித்திருக்கலாம். ஐஸ்வர்யா தத்தாவின் கேரக்டர் படத்தின் வேகத்தை குறைக்கின்றது. அதேபோல் சரண்யா பொன்வண்ணனின் பிளாஷ்பேக் காட்சிகள் ஓகே என்றாலும் இதுமாதிரி சீரியஸான படத்திற்கு இவ்வளவு நீளமான பிளாஷ்பேக் காட்சிகள் தேவையில்லை. 

இருப்பினும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மையமாக வைத்து இயக்குனர் சொல்ல விஷயத்தை சரியாக சொல்லியிருப்பதால் இந்த படத்தை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம், குறிப்பாக அதிகம் நகை அணிந்து ஒரு நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'

Rating : 2.3 / 5.0