கூட்டம் கூட்டமாகப் பயிர்களைத் தாக்கும் வெட்டுக்கிளிகள் – சோமாலியா, பாகிஸ்தானில் விவசாய அவசர நிலை அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,February 03 2020]

சமீபத்தில் வெளியான காப்பான் படத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகக் கூட்டம் கூட்டமாக பயிர்களை நாசம் செய்யும் வெட்டுகிளிகள் செயற்கையாக உருவாக்கப் பட்டு அனுப்பப் படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதே போன்று கடந்த ஆண்டு குஜராத், பனாஸ்காண்டா பகுதியில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்தன. இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் இராணுவத்தால் அனுப்பப் பட்டவை  என்று கூட பரபரப்பு கிளம்பியது.

டிசம்பர் 14 ஆம் தேதியன்று திடீரென்று காற்றின் திசைக்கு ஏற்ப கூட்டம் கூட்டமாக பரவிய  வெட்டுக்கிளிகள் பனாஸ்காண்டா பகுதியில் வேடாசர், தக்வா,  நாரோலி, நட்கா, ஆந்த்ரோட் , ரந்தன்பூர், நரேனசரி, ஆரோன்பூர் போன்ற பகுதிகளில் வளர்ந்திருந்த ஆமணக்கு, வெந்தயம்,  சீரகம் போன்ற பயிர்களை கடுமையாக தாக்கியது. ஒரு வாரம் தொடர்ந்து சுற்றித் திரிந்த வெட்டுகிளிகளை  அம்மாநில அரசு கடும் முயற்சிக்குப் பின்னர் ஒழித்தது.

அதே போன்ற சம்பவம் தற்போது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை முதல் பாலைவனப் பகுதிகளில் இருந்து பரவிய வெட்டுக் கிளிகள் அந்நாட்டின் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பெரிய பெரிய பயிர்களை தாக்கி நாசம் செய்து வருகின்றன. இது வரை நான்கு மாகாணங்களில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பிரதமர் இம்ரான் கான் விவாசய அவசர நிலையை அந்நாட்டில் பிறப்பித்து உள்ளார். மேலும், இந்த நெருக்கடியான விவசாய சூழலைச் சமாளிக்க ரூ.730 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னதாக 2019 மார்ச்சில் பாகிஸ்தான் சிந்து பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் சுமார் 9,00,000 ஹெக்டேர் பயிர்கள் நாசமிகின என்பதும் கவனிக்கத் தக்கது. மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள் மற்றும் பயிர்கள் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் அழிக்கப் பட்டன. இந்த முறை வெட்டுக்கிளிகளின் பரவலைத் தடுக்க அந்நாட்டில் முன்னதாகவே ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

மேலும்,  கூட்டம் கூட்டமாக பரவி பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் சோமாலியாவில் தற்போது அந்நாட்டின் உணவு பாதுகாப்பிற்கே சாவல் விடும் அளவிற்கு ஆபத்தினை விளைவித்து வருகிறது. கென்யாவிலும் வெட்டுகிளிகள் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகப் படியான பூச்சிக் கொல்லி மருந்துகளை அந்நாட்டு அரசாங்கம் தற்போது பயன்படுத்தி வருகிறது.