'மாஸ்டர்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமா? படக்குழுவினர் விளக்கம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிய பின்னர், திரை அரங்குகள் திறந்த பின்னரே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் ஆகிவிட்டதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் மற்றும் இரண்டு நிமிடங்கள் என்றும் சமூக வலைதளங்களில் சென்சார் சான்றிதழ் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் சிலர் இந்த படம் சென்சார் ஆகிவிட்டதாக செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து மாஸ்டர் பட குழுவினர் கூறிய போது ’’மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் சென்சார் சான்றிதழ் போலியானது என்றும் எனவே அதனை விஜய் ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும் ’மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் ஆனபின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே நெட்டிசன்கள் யாரோ சிலர் போலியான ’மாஸ்டர்’ சென்சார் சான்றிதழை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.