மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்கும் 'மாஸ்டர்' பாடல்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே. தமிழ் மொழியை தெரியாதவர்கள் கூட உலகின் பல நாட்டினர் இந்த பாட்டுக்கு நடனம் ஆடி வரும் வீடியோக்கள் பல சமூக வலைதள வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மருத்துவர்கள் தங்கள் மன அழுத்தத்தை போக்குவதற்காக ’மாஸ்டர்’ பாடலுக்கு நடனம் ஆடி வரும் தகவல் தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரியும் செந்தில்குமார் என்பவர் தனது சக மருத்துவர்களுடன் மன அழுத்தத்தை போக்குவதற்காக அவ்வப்போது ’மாஸ்டர்’ பட பாடலுக்கு நடனமாடி வருவதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காலத்தில் உயிருக்கு போராடுபவர்கள் அதிகம் வருவதால் நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகமாகி விடும் என்றும், நோயாளிகளை விட அவர்களுடைய உறவினர்களுக்கும் பதில் சொல்வது மிகப்பெரிய விஷயம் என்றும் இதனால் மருத்துவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக நர்சுகளும் பயிற்சி மருத்துவர்களும் இதனால் பெருமளவு மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், அதில் இருந்து விடுபடுவதற்காக அவர்களுடன் சேர்ந்து அவ்வப்போது நடனம் ஆடுவதாகவும் அவர் கூறியுள்ளார். பெரும் நடனம் ஆடும்போது ’மாஸ்டர்’ படத்தின் பாடலையே அவர்கள் பயன்படுத்துவதாகவும் மருத்துவர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

முன்பெல்லாம் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு சென்று ரிலாக்ஸ் செய்வோம். ஆனால் தற்போது வீட்டுக்கு செல்வதையே கிட்டத்தட்ட மறந்து விட்டதால் மருத்துவமனையில் அவ்வப்போது நேரம் கிடைக்க்கும்போது நாங்கள் நடனமாடி எங்களுக்கு நாங்களே ரிலாக்ஸ் செய்து கொள்வோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் ’மாஸ்டர்’ பாடல் மருத்துவர்களின் மன அழுத்தத்தையும் போக்கியுள்ளது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.