ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி

சஞ்சு சாம்சனின் அதிரடியில் வீழ்ந்த சென்னை ராஜஸ்தான்: 216/7 (20 ஓவர்கள்) சென்னை: 200/6 (20 ஓவர்கள்) ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஷார்ஜாவில் நடந்த நான்காவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

சாம்சன் சக்கைபோடு

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் ஜாய்ஸ்வால் (6) ஏமாற்றினார். பின் கேப்டன் ஸ்மித் உடன் இணைந்த சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் ஆடினார். சென்னை பவுலர்களை சிதறடித்த சாம்சன், 9 இமாலய சிக்சர்கள், 1 பவுண்டரி என மொத்தமாக 74 ரன்கள் விளாசி வெளியேறினார். இவர் வெளியேறிய பின் அதிரடியை தொடர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 47 பந்தில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 69 ரன்கள் அடித்தார்.

2 பந்தில் 27 ரன்கள்.

இறுதியில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் தன்பங்கிற்கு ஒரு காட்டு காட்டினார். லுங்கி நிகிடி கடைசி ஓவரை படு சொதப்பலாக வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை 2 இமாலய சிக்சர்களைபறக்கவிட்டார் ஆர்ச்சர். அடுத்த இரண்டு பந்துகளை நோ-பாலாக் நிகிடி வீச இதிலும் இரண்டு சிக்சர்கள் பறக்கவிட்டார் ஆர்ச்சர். இதையடுத்து 2 பந்தில் 27 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி. இதையடுத்து 20 ஓவரில் 7விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி.

இலக்கு நெருக்கடி

இமாலய இலக்கைத் துரத்திய சென்னை அணி பேட்ஸ்மேன்கள் அந்த நெருக்கடியில் தவித்தது கண்கூடாகவே தெரிந்தது. முரளி விஜய் (21), ஷேன் வாட்சன் (33) ஆகியோர் சுமாரான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த சாம் கரன் (17) வந்த வேகத்தில் இரண்டு சிக்சர் பறக்கவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த ஃபாப் டூபிளஸியும் கேதர் ஜாதவும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ஆடினர். எனினும் ரன் வேகம் ஆமையாகவே நகர்ந்தது. இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற 42 பந்தில் 109 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் டூபிளஸி அதிரடி காட்டத் துவங்கினார். இவருக்கு கேப்டன் தோனி நல்ல கம்பெனி கொடுத்தார். முதல் 18 பந்தில் வெறும் 17 ரன்கள் மட்டும் எடுத்திருந்த டூபிளஸி, அடுத்தடுத்து சிக்சர்களாகப் பறக்கவிட்டார். இவர் 72 ரன்கள் எடுத்தபோது ஆர்ச்சர் பந்தில் அவுட்டானார். சென்னை அணியின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை அணி வெறும் 21 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பரிசளித்த நிகிடி

இப்போட்டியில் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி என்றும் சொல்லலாம். இவர் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் எடுக்கப்பட்டன. ஒருவேளை இந்த ஓவரில் நிகிடி அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால், சென்னை அணிக்கு வெற்றி வசப்பட்டிருக்கும். பழைய தல சென்னை அணி இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்தபோதும் ராஜஸ்தான் அணியின் டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் தோனி மூன்று இமாலய சிக்சர்கள் பறக்கவிட்டார். இது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் இருந்தது. மேலும் தோனியின் பினிஷிங் குறித்து விமர்சித்தவர்களுக்கு சவுக்கடி பதிலாகவும் இது அமைந்தது.

சீறி எழுந்த சாம்சன்

இப்போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாம்சனின் ஆட்டம்தான் போட்டியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்து பறித்தது என்று சொல்லலாம். இப்போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு எதிராக ஐபிஎல் அரங்கில் சாம்சன் மொத்தமாக 7 இன்னிங்சில் பங்கேற்று வெறும் 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் இப்போட்டியில் களமிறங்கியது முதல் சிக்சர்களாகப் பறக்கவிட்டு சென்னை அணிக்கு எதிரான தனது மோசமான இமேஜை உடைத்தெறிந்தார். 19 பந்தில் அரைசதம் கடந்து அசத்தினார் சாம்சன். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் ராஜஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஓவன் ஷா (19 பந்துகள், 2012, எதிரணி- பெங்களூரு). இப்பட்டியலில் ஜாஸ் பட்லர் (18 பந்துகள், 2019, எதிரணி - டெல்லி) முதலிடத்தில் உள்ளார்.

17 சிக்சர்கள்

இப்போட்டியில் 216 ரன்கள் சேர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் அரங்கில் தனது நான்காவது சிறந்த ஸ்கோரைப் பதிவு செய்தது. முன்னதாக 2010இல் சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 223 ரன்கள் சேர்த்துள்ளது. அதேபோல சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி வீரர்கள் மொத்தமாக 17 சிக்சர்கள் விளாசினர். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்து அசத்தியது ராஜஸ்தான் அணி. முன்னதாக டெக்கான் அணிக்கு எதிராகவும் (2008), பெங்களூரு அணிக்கு எதிராகவும் (2018) ராஜஸ்தான் அணி 14 சிக்சர்கள் அடித்திருந்தது.

எடுபடாத ஸ்பின்

யுஏஇ ஆடுகளங்கள் பொதுவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது இல்லை என்பது தெரிந்த ஒன்றுதான். இது சென்னை- ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் தெளிவாக தெரிந்தது. இப்போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் சேர்ந்து மொத்தமாக 416 ரன்கள் (216 + 200) எடுத்தது. இதில் இரு அணிகளில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்ந்து மொத்தமாக 16 ஓவர்கள் வீசி (95 ரன்கள் (சிஎஸ்கே) + 75 (ராஜஸ்தான்)) மொத்தமாக 170 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.