இரக்கமற்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னரும் இயக்குனர்கள் இன்னும் திருந்தவில்லை என்றும் பல இயக்குனர்கள் இரக்கம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் ஒரு சில முதிர்ச்சி அடைந்த இயக்குனர்கள் மட்டுமே டீசன்டாக நடந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர் எஸ்ஜே சூர்யாவின் ’அன்பே ஆருயிரே’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பிரசாந்தின் ’ஜாம்பவான்’ சிபிராஜின் ‘லீ’ அர்ஜுனனின் ’மருதமலை’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை நிலா. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர் தற்போது மீரா சோப்ரா என்ற பெயரில் பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சுஷாந்தின் தற்கொலை குறித்து நடிகை நிலா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சில நடிகர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்வது எது என்று வெளிப்படுத்த நான் விரும்புகிறேன். சினிமா துறை என்பது ஒருசில குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சொந்தமானது போன்று சிலர் செயல்படுகின்றனர். ஒருசில இயக்குனர்கள் இரக்கமே இல்லாமல் நடந்து கொள்கின்றனர். முதிர்ச்சியான இயக்குனர்கள் மட்டுமே அவ்வாறு செய்வதில்லை.

எனக்கும் இது போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. ஆனால் அதனை வெளிப்படுத்தினால் எத்தனை பேர் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறி என்பதால் அதனை நான் வெளிப்படுத்தவில்லை. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னரும் எதுவும் மாறவில்லை. சினிமாவில் பல விஷயங்கள் நடக்கின்றன. இதனால் ஏற்படும் மன அழுத்தம்தான் சுஷாந்த் உட்பட பலர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுக்க காரணம் என்று தெரிவித்துள்ளார். நடிகை நிலாவின் இந்த டுவிட்டுகள் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.