திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதேபோல் திரையரங்குகளும் இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட போஸ்ட் புர்டொக்சன்ஸ் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்தது. அதுமட்டுமன்றி தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து திரைப்பட படப்பிடிப்புக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இன்று அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

திரைப்பட படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அதிகம் கூடுவார்கள் என்பதால் அது குறித்து ஆலோசித்து முதல்வர் தக்க நேரத்தில் முடிவு எடுப்பார். ஆந்திரா தவிர வேறு எந்த மாநிலத்திலும் இன்னும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதன் விளைவுகளை ஆராய்ந்து முதல்வர் படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை திறப்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.