'சர்கார்' விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,November 07 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் நேற்றைய தீபாவளி தினத்தில் வெளியாகி அனைத்து முதல் நாள் வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்கியுள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் இனிவரும் வசூல் நிலவரத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் விமர்சனங்களையும் தாண்டி அரசியல்வாதிகள் இந்த படத்தை ஹிட்டாக்கிவிடுவார்கள் போல் தெரிகிறது. சற்றுமுன் இந்த படம் குறித்து பாஜக பிரமுகர் ஒருவர் மறைமுகமாக தனது டுவிட்டரில் தெரிவித்த நிலையில் தற்போது 'சர்கார்' படக்குழுவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை செய்துள்ளார்.

சர்கார் படத்தில் அரசு கொடுக்கும் இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், ஆகிய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்று ஒரு காட்சி உள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி ஒரு மிக்ஸியை நெருப்பில் போடுவார். இந்த காட்சிதான் தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளார்.

சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது, இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் சர்காரில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் எச்சரிக்கைக்கு சர்கார் படக்குழுவின் ரியாக்சன் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.