ஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் களத்தில் அதிமுக “வெற்றி நடைபோடும் தமிழகம்” எனும் பெயரில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே எதிர்க் கட்சியான திமுக முதலில் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” எனும் பெயரில் பிரச்சாரத்தைத் தொடங்கியது. தற்போது “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் வரும் 29 ஆம் தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் செல்ல இருக்கிறாராம். மேலும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களைச் சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறப் போகிறாராம். இப்படி பெறும் கோரிக்கைகள் அனைத்தும் எதிர்க் கட்சியான திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்களில் நிறைவேற்றித் தருமாம்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் ஸ்டாலின் அடுத்தடுத்த 30 நாட்களில் வருகைத் தரப்போகிறார். இதற்கான செலவுகளை நினைத்தாலே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு கடும் பயத்தை ஏற்படுத்துகிறதாம். மேலும் ஸ்டாலின் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்கப் போகிறார். அப்படி சந்திக்கும்போது பெறப்படும் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரமுடியுமா? என்ற கேள்வியும் முன்வைக்கப் படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் குறைத் தீர்ப்பு மன்றம் நடத்தப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவும் தமிழகத்தில் துரிதமாகச் செயல்படுத்தப் படுகிறது. இப்படி இருக்கும்போது எதற்கு மனுக்களை பெறுவதற்காக தனியொரு சுற்றுப் பயணம் என்றும் சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒருவேளை மக்களைச் சந்தித்து அவர்களிடம் இருந்து லட்சக் கணக்கான கோரிக்கை மனுக்களை வாங்கினாலும் எப்படி 100 நாட்களில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யமுடியும்? என்ற நிதர்சனமான கேள்விகளையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர், கொரோனா நிவாரணம், இணையவழி உறுப்பினர் சேர்க்கை, விடியலை நோக்கி… ஸ்டாலின் குரல் திட்டம், மக்கள் கிராமசபை கூட்டம், கனிமொழி, உதயநிதி பிரச்சாரக் கூட்டங்கள் என பல செலவுகளை ஏற்கனவே சந்தித்து விட்டோம். தற்போது 30 நாட்களில் 234 தொகுதி, மக்களிடம் நேரடியான சந்திப்பு என இன்னொரு புதிய செலவையும் சந்திக்க வேண்டுமா? என அதிருப்தி தெரிவித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

மேலும் இந்தப் புதிய திட்டம் ஆட்களைத் திரட்டுவது, செலவுகளை கவனிப்பது, கட்சி அமைப்புகளை ஒன்று திரட்டுவது என ஏகப்பட்ட வேலைகளை இது இழுத்து விட்டுவிடும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் புலம்பி தள்ளி வருகின்றனராம். இதனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கள நிலவரத்தையும் யதார்த்தத்தையும் கொஞ்சம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் சிலர் முன்வைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.