Download App

Mo Review

புதியவரான புவன் நல்லான் இயக்கியிருக்கும் ‘மோ’ இந்த ஆண்டு வெளியான ஹாரர்-காமடிப் படங்களின் பட்டியலில் இணைகிறது. இந்த நீண்ட பட்டியலில் ஓரளவு ரசிக்கவைத்த சில படங்களில் ஒன்றாகச் சேருமா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

தேவ் (சுரேஷ் ரவி), சதீஷ் (ரமேஷ் திலக்) மற்றும் குமார் (தர்புகா சிவா) என்ற மூன்று நண்பர்கள் மக்களின் பேய் பயத்தை வைத்து அவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கிறார்கள். மேக்கப் கலைஞர் ஜோசப் செல்லப்பா (ராமதாஸ்) மற்றும் சினிமா துணை நடிகை ப்ரியா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் பேய் வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற இவர்களுக்கு உதவும் கூட்டாளிகள்.

இவர்கள் ஏமாற்றுக்கார்கள் என்று தெரிந்துகொள்கிறான் ரியல் எஸ்டேட் தொழிலில் செல்வாக்கு மிக்கவனான வெற்றிவேல் (செல்வா). தனக்கு உதவாவிட்டால் போலீஸிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுகிறான்.  அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பாழடைந்த பள்ளிக் கட்டத்தை விலைக்கு வாங்குவதில் தனக்குப் போட்டியாக இருக்கும் செந்தில்நாதன் (மைம் கோபி) என்பவனை அங்கு பேய் இருப்பதாக நம்பவைத்து விரட்டி அடிக்க இவர்களை அனுப்புகிறான் வெற்றிவேல்.

பாண்டிச்சேரியில் நடப்பது என்ன? வெற்றிவேலின் திட்டம் நிறைவேறியதா? பேயை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் குழுவுக்கு என்ன ஆனது? என்பதை திரையில் காண்க.

படம் தொடங்கி சில நிமிடங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைப்பது மட்டுமே இயக்குனரின் நோக்கம் என்பது தெரிந்துவிடுகிறது. திரைக்கதையில் போதுமான அளவு நகைச்சுவை தருணங்கள் மற்றும் தேர்ந்த நடிகர்களின் துணையுடன் அந்த நோக்கம் பெருமளவில் நிறைவேறுகிறது.

பொய்ப் பேய் மற்றும் நிஜப் பேய் இடையிலான விளையாட்டுதான் படத்தின் மையம்.  சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் நாம் இதைப் பார்த்தோம். ஆனால் இந்தப் படத்தில் பொய்ப் பேயும் அதனால் நடக்கும் சுவாரஸ்யங்களும் பெரும்பங்கை எடுத்துக்கொள்கின்றன. நிஜப் பேய் கடைசி சில காட்சிகளில்தான் வருகிறது. எப்படியும் ஒரு கட்டத்தில் நிஜமான பேய் வரப்போகிறது என்று நமக்குத் தெரியும் என்றாலும் அதை நோக்கி நகரும் காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்கின்றன. காமடிதான் அதற்கும் காரணம்.

கதையின் மையத்திலிருந்து எந்த விலகலும் இல்லாத திரைக்கதை அமைத்திருப்பதற்காக இயக்குனர் புவன் நல்லானைப் பாராட்ட வேண்டும். ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற ஒரு முன்னணி நடிகை இருந்தும் படத்தில் காதலுக்கு இடமே இல்லை. கவர்ச்சி, ஆபாசம் போன்ற எதுவும் இல்லாமல் சுத்தமான படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு பாடல்தான் அதுவும் மையப் பாத்திரங்களை முன்கதையைச் சொல்லப் பயனபடுத்தப்பட்டிருக்கிறது.

எதிர்பார்ப்புகள் பெரிதாக இல்லாததால் குறைகளும் பெரிதாகத் தெரியவில்லை. இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பது, ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கவைத்துவிட்டு காமடியாக முடியும் கிளைமேக்ஸ் ஆகியவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

அதே போல் முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் திரைக்கதையை கொஞ்சம் முன்னுக்குப் பின் மாற்றி அமைத்து சில ட்விஸ்ட்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை வேண்டுமென்றேதான் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் போலும்.

ரமேஷ் திலக், தர்புகா சிவா, ராமதாஸ் ஆகியோர் படவசனங்கள், உச்சரிப்பு, உடல்மொழி ஆகியவற்றின் மூலம் சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக ராம்தாஸ் இரண்டாம் பாதியில் அதகளப்படுத்தியிருக்கிறார். கொஞ்சம் சீரியஸான பாத்திரத்தில் வரும் சுரேஷ் ரவி தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் யோகிபாபு தன் பாணியில் சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போடுகிறார். மைம் கோபி, சுப்பர்குட் சுப்பு ஆகியோர் இரண்டாம் பாதியில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் பேய்க்கு பயந்து அலறி, சிரிக்கவைக்கிறார்கள்.

செல்வா குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புத் திறமைக்கு சவால் இல்லாத வேடம். இருந்தாலும் கச்சிதமான முகபாவங்கள் மற்றும் வசன உச்சரிப்பின்மூலம் தன் இருப்பைப் பளிச்சென்று தெரியவைக்கிறார்.

விஷ்ணுஸ்ரீ கே என்பவரின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென்று உள்ளன. குறைந்த ஒளியும் இருட்டும் நிரம்பிய இரவுக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தொகுப்பாளர் கோபிநாத் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். சில வசனங்களும் ஷாட்களும் சொன்னதையே திரும்ப சொல்கின்றன. பாலசுப்ரமணியத்தின் கலை இயக்கத்தில் அந்த பாழைடைந்த பிரம்மாண்டமான பள்ளி தத்ரூபமாக வெளிப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் காமடி அதிகமாகவும் ஹாரர் மிகக் குறைவாகவும் உள்ள படம்தான் ’மோ’. எதிர்பார்ப்புகளின்றி உள்ளே சென்றால் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு வரலாம்.

Rating : 2.5 / 5.0