"பிரதமருக்கு மட்டும் குடியுரிமைச் சான்றிதழ் தேவையில்லை"..! RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்.

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதில் இருந்தே, இந்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சுபங்கர் சர்கார் என்பவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், ''பிரதமர் நரேந்திர மோடி, 1955 குடியுரிமைச் சட்டப் பிரிவு 3-ன்படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன். எனவே, அவர் குடியுரிமைச் சான்றிதழ் வைத்திருப்பது தொடர்பான கேள்விகளுக்கு இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் சீமி பாஷா, ''குடியுரிமைச் சட்டம் 1955-ன் பிரிவு 3-ன்படி, பிரதமர் தன்னுடைய குடியுரிமையைப் பதிவு செய்யத் தேவையில்லை என்றால், பிறகு மற்றவர்கள் ஏன் தங்களுடைய குடியுரிமையைப் பதிவு செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

'சாதாரண மனிதன் இதுபோன்ற பதில்களைக் கூறினால் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?' போன்ற கமென்டுகளையும் 'இந்தியர் ஏன் குடியுரிமையை நிரூக்க வேண்டும்?' போன்ற கமென்டுகளையும் பதிவு செய்து பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதில் தொடர்பாக விவாதங்களை நடத்தி வருகின்றனர். குடியுரிமைச் சட்டம் தொடர்பாக கடுமையான வன்முறைகள் நடந்துள்ள நிலையில், இந்தப் பதிலை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.