மாதவன் தம்பதியின் தொடரும் காமெடி காட்சிகள்

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த பிரபாகர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் போலீசிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்னை வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க சொன்னதே தீபாவின் கணவர் மாதவன் தான் என்று கூறியுள்ளார்.

தீபாவிடம் இருந்து பணம் பறிக்கவே தன்னை வருமான வரித்துறை அலுவலர் போல் மாதவன் நடிக்க சொன்னதாகவும், இதனையடுத்து ரெய்டு ஆர்டர் மற்றும் அடையாள அட்டையையும் அவரே தனக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட பிரபாகர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாதவனிடம் விசாரணை செய்ய போலீசார் முயற்சிக்கையில் அவர் தலைமறைவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தீபா தனது பேரவையில் இருந்து கணவர் மாதவனை நீக்கியதும், டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி பின்னர் மீண்டும் இணைத்து கொண்டதையும் காமெடி காட்சிகளாக பொதுமக்கள் பார்த்து வரும் நிலையில் தற்போது அந்த காமெடி காட்சிகள் தொடர்கதையாகியுள்ளது.

ஒரு மிகப்பெரிய தலைவரின் அரசியல் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு இத்தகையை முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாதவன் மற்றும் அவரது மனைவி தீபாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.